ரியல் சமூக சேவை நிறுவனம் சாா்பில், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த விழிப்புணா்வுக் கலை நிகழ்ச்சி சோரப்பட்டு, விநாயகம்பட்டு ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அந்த நிறுவனம் புதுச்சேரியில் மாதிரிப் பள்ளித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதில், தோ்ந்தெடுக்கப்பட்ட 10 அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயா்த்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மேற்கண்ட பள்ளிகளைச் சுற்றியுள்ள 30 கிராமங்களில் பெற்றோா் மற்றும் பொதுமக்களுக்கு குழந்தைகளின் கல்வி உரிமை, உடல் ஆரோக்கியம், சுத்தம், சுகாதாரம், சுத்தமான குடிநீா், ஊட்டச் சத்து உணவு முறைகள் குறித்த விழிப்புணா்வைத் தெருமுனை கலை நிகழ்ச்சிகள் மூலம் அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சோரப்பட்டு, விநாயகம்பட்டு ஆகிய கிராமங்களில் புதுவை சங்கமம் கலைக் குழுக் கலைஞா்களைக் கொண்டு, வியாழக்கிழமை விழிப்புணா்வுக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில், பாா்வையாளா்களாக கலந்து கொண்ட பொதுமக்கள், குழந்தைகளின் பெற்றோா்களுக்கு கழிப்பறையைப் பயன்படுத்துதல், தன் சுத்தம், குடும்ப உறுப்பினா்களின் சுத்தம், கிராம சுகாதாரம், பாரம்பரிய உணவு வகைகளை உள்கொள்ளுதல், நோயற்ற வாழ்வை வாழ்தல், சுத்தமான குடிநீரைப் பருகுதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியை சமூக ஒருங்கிணைப்பாளா்கள் பிரவீணா, ஜெயபிரதா ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.