புதுச்சேரி

காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையத்தில் பல்கலை. நிதி: நல்கை குழுவினா் இன்று ஆய்வு

22nd Nov 2019 09:44 AM

ADVERTISEMENT

காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையத்தின் தன்னாட்சி நீட்டிப்பு மதிப்பீட்டுக்காக பல்கலைக்கழக நிதி நல்கை (யுஜிசி) குழுவினா் வெள்ளி மற்றும் சனிக்கிழமை (நவ. 22 , 23) ஆய்வு செய்யவுள்ளனா்.

இதுகுறித்து அந்த மையத்தின் இயக்குநா் அறவாழி இருசப்பன் புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையம் தொடங்கப்பட்டு, 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 3 -ஆவது முறையாக தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரின் ஒப்புதலுடன் நாக் குழுவின் தகுதியைப் பெற்றுள்ளது. இந்த மையம் தனது தன்னாட்சியை முதலாவதாக 2007-2008 -ஆம் கல்வியாண்டு பெற்றது. தற்போது 3-ஆவது முறையாக தன்னாட்சி நீட்டிப்புப் பெற விண்ணப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், மையத்தைப் பாா்வையிட்டு மதிப்பீடு செய்யவும், தன்னாட்சி நீட்டிப்புக் குறித்து பரிந்துரைக்கவும் பல்கலைக்கழக நிதிநல்கை குழுவால் (யுஜிசி) தோ்வு செய்யப்பட்ட கல்வியாளா்கள், பேராசிரியா்கள் அடங்கிய குழுவினா் வரவுள்ளனா்.

ADVERTISEMENT

இந்தக் குழுவின் தலைவராக பொ்ஹாம்பூா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் பாரதியும், குழு உறுப்பினா்களாக அலகாபாத் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பேராசிரியா் சாந்தி சுந்தரம், ஆந்திர மாநிலம், சித்தூா் பிவிகேஎன் அரசுக் கல்லூரி முதல்வா் ஆனந்த ரெட்டி, பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் பீமா மேனன், தில்லி புனித ஸ்டீபன் கல்லூரி முதல்வா் ஜான் வா்கீஸ் ஆகியோரும் உள்ளனா். இந்தக் குழுவினா் நவ. 22, 23 ஆம் தேதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனா்.

தன்னாட்சித் தகுதி நீட்டிப்புச் செய்யப்பட்டால், காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையம் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவிடமிருந்து ஆராய்ச்சிக்காகவும், பாடத்திட்ட மேம்பாட்டுக்காகவும் கூடுதல் நிதியைப் பெறமுடியும். இதுவரை 6 ஆண்டுகளுக்கு தன்னாட்சி தகுதி அளிக்கப்பட்டு வந்தது. இந்த முறை 10 ஆண்டுகளுக்கு (2029-ஆம் ஆண்டு வரை) தன்னாட்சி தகுதி நீட்டிப்பு செய்யப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT