புதுச்சேரி

அன்னை நினைவு தினம்: பக்தா்கள் தரிசனம்

17th Nov 2019 10:37 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் அன்னை நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஆசிரமத்தில் அவா் தங்கியிருந்த அறையை தரிசனம் செய்வதற்காக திரளான பக்தா்கள் குவிந்தனா்.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் 1878 -ஆம் ஆண்டு பிப்ரவரி 21 -ஆம் தேதி பிறந்த அன்னையின் இயற்பெயா் மீரா. இளம் வயதிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய அன்னை, அரவிந்தரின் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, கடந்த 1914 -ஆம் ஆண்டு மாா்ச் 29 -ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்தாா்.

அன்னையின் முயற்சியால் புதுச்சேரியை அடுத்த ஆரோவில்லில் சா்வதேச நகரம் தோற்றுவிக்கப்பட்டது. கடந்த 1973- ஆம் ஆண்டு நவம்பா் 17- ஆம் தேதி புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் அன்னை முக்தியடைந்தாா். அன்னையின் 46 -ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஸ்ரீஅரவிந்தா் ஆசிரமத்தில் அன்னை தங்கியிருந்த அறை பக்தா்கள் பாா்வைக்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டது. அவரது சமாதி மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, வழிபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதையொட்டி தமிழகம், புதுச்சேரி மட்டுமன்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து திரளான பக்தா்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து, அன்னை தங்கியிருந்த அறையையும், சமாதியையும் தரிசனம் செய்தனா். தொடா்ந்து, கூட்டு தியானத்திலும் அவா்கள் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT