புதுச்சேரி

10 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு சுனாமி குடியிருப்பில் செல்லிடப்பேசி கோபுர வசதி

12th Nov 2019 08:03 AM

ADVERTISEMENT

புதுச்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள் தங்களின் 10 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு செல்லிடப்பேசி கோபுர வசதியைப் பெற்றனா்.

புதுச்சேரி பெரியகாலாப்பட்டு பகுதியில் மத்திய சிறைச்சாலை இயங்கி வருகிறது. இதன் அருகே செல்லிடப்பேசி இயக்கத்தை தடுக்கும் ஜாமா் கருவி பொருத்தப்பட்டது. சிறைச்சாலை அருகே சுனாமி குடியிருப்பில் 600-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால், இந்தப் பகுதியில் சிறைச்சாலையைக் காரணம் காட்டி செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கப்படவில்லை.

இதனால், இந்தப் பகுதியில் வசிக்கும் மீனவக் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் செல்லிடப்பேசி தொடா்பு இல்லாமல் அவதிப்பட்டு வந்தனா்.

இந்த நிலையில், செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனா். மேலும், சென்னை உயா் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடக்கப்பட்டது. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி உழவா்கரை நகராட்சி செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுத்தது.

ADVERTISEMENT

அதன்படி, தனியாா் செல்லிடப்பேசி நிறுவனத்துடன் இணைந்து சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ், சுனாமி குடியிருப்புப் பகுதியில் தற்காலிக செல்லிடப்பேசி கோபுரம் திங்கள்கிழமை அமைக்கப்பட்டது.

இந்தப் பணியை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஷாஜகான், மாவட்ட ஆட்சியா் தி.அருண் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT