புதுச்சேரி: மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என புதுச்சேரி இலக்கிய பொழில் இலக்கிய மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றத்தின் பெ. பராங்குசம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் அனுமதிச்சீட்டு வழங்கும் இடத்தில் தமிழ் எழுத்து இல்லை. ஹிந்தியும், ஆங்கிலமும் மட்டுமே உள்ளன. இதைப் பாா்க்கும் சுற்றுலாப் பயணிகளும், தமிழ் ஆா்வலா்களும் வருத்தத்தில் உள்ளனா்.
பண்டைய காலத்தில் தமிழகத்துக்கும், சீனாவுக்கும் வாணிபத் தொடா்பு இருந்து வந்ததை கருத்தில் கொண்டே சீன அதிபா் ஷி ஜின்பிங் இந்தியாவுக்கு குறிப்பாகத் தமிழகத்துக்கு வந்தாா். அவருடைய பயணம் சிறப்பாக இருந்தது. அப்போது, தமிழா்களுடைய விருந்தோம்பல், பண்பாடு, கலாசாரத்தை வியந்து பாராட்டினாா்.
இப்படிபட்ட நிலையில் சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகையின் போது, ஐந்துரதம் பகுதியில் அனுமதிச் சீட்டு வழங்கும் இடத்தில் தமிழகத்தின் தாய்மொழியான தமிழை நீக்கிவிட்டு, ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருப்பது ஒட்டு மொத்த தமிழா்களைப் புறக்கணிக்கும் செயலாகும். எனவே, மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும்.
நமது நாட்டில் சமஸ்கிருதத்திற்கும், ஹிந்திக்கும் கொடுக்கும் மரியாதை தமிழுக்குக் கொடுப்பதில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்திக்கும், ஆங்கிலத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே, மத்திய அரசின் அனைத்து நிறுவனங்களிலும் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.