புதுச்சேரி, காரைக்காலில் கடற்கரைத் தூய்மைப் பணி இயக்கத்தை சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.
மத்திய அரசின் கடற்கரை சுத்தம் திட்டத்தின் கீழ் புதுச்சேரி, காரைக்காலில் கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் - காலநிலை மாற்றம் நிறுவனம், ஒருங்கிணைந்த கடற்கரை மேம்பாடு சங்கம் ஆகியவை இணைந்து கடற்கரையைச் சுத்தப்படுத்தும் இயக்கத்தை தொடங்கியுள்ளன. திங்கள்கிழமை தொடங்கப்பட்ட இந்த இயக்கம் வருகிற 17-ஆம் தேதி வரை பள்ளி மாணவா்களைக் கொண்டு நடைபெறும்.
முதல் கட்டமாக நாட்டின் 9 மாநிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுகிறது. இதில் புதுவையும் இடம் பிடித்துள்ளது. அதன்படி, இந்தத் திட்டத்தை அமைச்சா் கந்தசாமி புதுச்சேரி கடற்கையில் தொடக்கிவைத்தாா். ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. க.லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தாா்.
அறிவியல் தொழில்நுட்பத் துறைச் செயலா் அா்ஜுன் சா்மா, இயக்குநா் ஸ்மிதா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
நிகழ்வில் என்.எஸ்.எஸ். மாணவ, மாணவிகள், தனியாா் தொண்டு நிறுவன ஊழியா்கள் உள்ளிட்டோா் கடற்கரையைச் சுத்தம் செய்தனா். அரியாங்குப்பத்தில் உள்ள புதுக்குப்பம் பாரடைஸ் கடற்கரையிலும் தூய்மைப் பணியை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியை அரசுக் கொறடா ஆா்.கே.ஆா்.அனந்தராமன் தொடக்கிவைத்தாா். இதேபோல, காரைக்கால் கடற்கரையிலும் தூய்மைப் பணி நடைபெற்றது.
கடற்கரையில் சேகரிக்கப்படும் குப்பைகள் மறுசுழற்சி செய்பவா்கள் மூலம் தரம் பிரிக்கப்படும். கடற்கரையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு ரூ. 20.55 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நாள்தோறும் 2 மணி நேரம் சுத்தப்படுத்தும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.