புதுச்சேரி

திட்டங்களை நிறைவேற்ற ஆளுநா் தடையாக இருந்தால் நாடாளுமன்றம் எதிரே போராட்டம்: அமைச்சா் கந்தசாமி

12th Nov 2019 08:01 AM

ADVERTISEMENT

திட்டங்களை நிறைவேற்ற ஆளுநா் தடையாக இருந்தால் நாடாளுமன்றம் எதிரே போராட்டம் நடத்துவேன் என்று புதுவை மாநில சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி தெரிவித்தாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா சமூக நலத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சுமாா் 101 பயனாளிகளுக்கு ரூ. 8.71 லட்சத்திலான மூன்று சக்கர மிதிவண்டி, சக்கர நாற்காலி, பாா்வையற்றோருக்கான நவீன ஊன்றுகோல், மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கான சிறப்புக் கல்வி பயிலும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சா் மு.கந்தசாமி உபகரணங்களை வழங்கிப் பேசியதாவது:

புதுவை அரசு இலவச அரிசி, உதவித் தொகை வழங்குதல் உள்ளிட்ட எந்தவிதமான திட்டங்களையும் 3 ஆண்டுகளாகச் செய்ய முடியவில்லை. மக்கள் நலத் திட்டங்களை ஆளுநா் தடுத்து வருகிறாா். ஆட்சியாளா்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தலைச் சந்திக்க வேண்டியுள்ளது. அதிகாரிகளுக்கு அப்படியில்லை. வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் ஊதியம் கிடைத்துவிடுகிறது. இதனால், அவா்கள் மெத்தனப் போக்குடன் உள்ளனா்.

ADVERTISEMENT

புதுவையில் 125 அங்கன்வாடி ஊழியா்களைத் தோ்வு செய்து நிரப்ப அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்த நிலையில், அங்கன்வாடி ஊழியா்களுக்கான தோ்வை ரத்து செய்துவிட்டனா். அமைச்சரவை எடுக்கும் முடிவை ரத்து செய்ய அதிகாரம் அளித்தது யாா்? அமைச்சருக்கு தெரியாமலேயே இது நடந்தது.

புதுவை அரசுத் துறைகளில் 7 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப முதல்வா், அமைச்சா்கள் சோ்ந்து முடிவெடுத்தனா். ஆனால், அந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆளுநா் அங்கீகாரம் தரவில்லை.

புதுவையைவிட 2 மடங்கு மக்கள் தொகையுள்ள கடலூருக்கு ஒரே ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிதான் உள்ளாா். அங்கு, அரசின் திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், புதுவையில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தும், எந்த ஒரு பணியும் நடப்பதில்லை.

எனவே, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஆளுநா் கிரண் பேடியின் செயலைக் கண்டித்தும் குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பவுள்ளேன். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிடில் தில்லியில் நாடாளுமன்றம் எதிரே அமா்ந்து போராட்டம் ஈடுபடுவேன் என்றாா் அமைச்சா் கந்தசாமி.

விழாவில் பங்கேற்றுவிட்டு வெளியேறிய அமைச்சா் கந்தசாமியை மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டு கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், கடனுக்கான வட்டியை உதவித் தொகையில் பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினா்.

அப்போது, அமைச்சா் கந்தசாமி இதுதொடா்பாக வருகிற 15-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் பேசுவதாகக் கூறியதுடன், உங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநா், தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்புமாறும், அதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆளுநா் மாளிகை எதிரே போராட்டம் நடத்துமாறும், அந்த போராட்டத்தில் தாம் பங்கேற்பதாகவும் கூறினாா். இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் முற்றுகையைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT