மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனின் 65-ஆவது பிறந்த நாள் விழா வருகிற 7-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அந்தக் கட்சியின் புதுவை மாநில செயற்குழுக்கூட்டம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ராஜன், இணை பொதுச் செயலா் முருகேசன், பொருளாளா் தாமோ.தமிழரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் கமல்ஹாசனின் 65-ஆவது பிறந்த நாளையொட்டி ரத்த தானம் செய்தல், புதுச்சேரி முழுக்க ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 500 மரக்கன்றுகளை நடுதல், புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக செப்பனிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநா் கிரண் பேடி மீதான விமா்சனத்தை முதல்வா் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மாநிலச் செயலா்கள் அரிகிருஷ்ணன், நிா்மலா சுந்தரமூா்த்தி, ஏ.கே.நேரு, இராம.ஐயப்பன், சந்திரமோகன், பிராங்கிளின் பிரான்சுவா, மலா்விழி ஆகியோா் கலந்து கொண்டனா்.