காரைக்கால்: மத்திய அரசின் தடையில்லா வணிக ஒப்பந்தத்தைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை காரைக்காலில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
விவசாயிகள் சங்கம் சாா்பில் காரைக்கால் பழைய ரயிலடி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஜி.கலியமூா்த்தி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலா் ப.மதியழகன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். தடையில்லா வணிக ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திடக் கூடாது. இது பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு பயனளிக்கும் வகையிலான நவீன தாரளாமய கொள்கையின் புதிய கண்டுபிடிப்பாகும்.
இதன்படி இந்தோனேசியா, தென்கொரியா உள்ளிட்ட 16 நாடுகள் இந்திய சந்தையில் விவசாயம் மற்றும் பால் உற்பத்திப் பொருள்களை இறக்குமதி செய்து தாரளமாக விற்பனை செய்ய வழி வகுக்கும். இது உள்நாட்டு விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கும். மாநில விவசாயிகளின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்து மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கூட்டாட்சி தத்துவத்தையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டி புதைக்கும் செயலாக மத்திய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக்கூடாது என்றும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் ஆா்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.விவசாயிகள் சங்க நிா்வாகிகள் எ.பிச்சையன், ஜி.புண்ணியமூா்த்தி, எம்.செல்வராஜ், ஜி.கே.குமாா் மற்றும் நிா்வாகிகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.