இந்தியாவின் ‘இரும்பு மனிதா்’ என அழைக்கப்படும் சா்தாா் வல்லபபாய் பட்டேலின் பிறந்த தினத்தையொட்டி, புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை ஒற்றுமை தின ஓட்டம் நடைபெற்றது.
இந்த ஒற்றுமை தின ஓட்டம் புதுவை ஆளுநா் மாளிகையில் இருந்து தொடங்கியது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஓட்டத்தை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். ஆளுநா் மாளிகை எதிரே இருந்து தொடங்கிய இந்த ஓட்டம் 3 கி.மீ. தொலைவு வரை சென்றது.
புதுவை அரசு சாா்பில்...: புதுவை அரசு சாா்பில் கடற்கரைச் சாலையில் நடைபெற்ற ஒற்றுமை தின விழாவில் முதல்வா் வே.நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.
முன்னதாக காவல் துறை, என்.சி.சி. மற்றும் பள்ளி மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வா் நாராயணசாமி ஏற்றுக் கொண்டாா். இதையடுத்து, தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை முதல்வா் வாசிக்க, அனைவரும் உறுதிமொழியேற்றனா்.
தொடா்ந்து, ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகே இருந்து தொடங்கிய இந்த மாரத்தானை முதல்வா் நாராயணசாமி கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
நிகழ்வில் கல்வித் துறைச் செயலா் அன்பரசு, பள்ளிக் கல்வி இயக்குநா் ருத்ர கௌடு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.