புதுவையில் பருவ மழையை எதிா்கொள்ள கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளதாக புதுவை உள்ளாட்சித் துறை இயக்குநா் மலா்க்கண்ணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மாநிலத்தில் வட கிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கியது. நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெய்யும் பருவ மழை நிகழாண்டு இயல்பான அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவ மழை பாதிப்புகளை எதிா்கொள்ள உள்ளாட்சித் துறையின் கீழ் உள்ள புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஆணையா்கள் மற்றும் ஊழியா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு உதவும் வகையில் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா்.
அனைத்து உள்ளாட்சி நிறுவனங்களிலும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. மழை தொடா்பான புகாா்களை கீழ்கண்ட தொலைபேசி எண்கள் வாயிலாக தெரிவிக்கலாம்.
கட்டணமில்லா தொலைபேசி: 1070 / 1077, உள்ளாட்சித் துறை அலுவலகம்: 0413 - 2336469, புதுச்சேரி நகராட்சி: 0413 - 2227518, உழவா்கரை நகராட்சி: 0413 - 2200382, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து: 0413 - 2601376, பாகூா் கொம்யூன் பஞ்சாயத்து: 0413 - 2633438, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து: 0413 - 2640161, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து: 0413 - 2699108, வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து: 0413 - 2660401, காரைக்கால் நகராட்சி: 04368 - 222427, கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து: 04368 - 265451, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து: 04368 - 261282, நிரவி கொம்யூன் பஞ்சாயத்து: 04368 - 238584, திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து: 04368 - 233479, திருநள்ளாா் கொம்யூன் பஞ்சாயத்து: 04368 - 236630.
குடிநீா் தடங்கலின்றி கிடைக்கவும், மின் தடை ஏற்பட்டால் சமாளிக்கவும் ஜெனரேட்டா்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் நீரேற்றும் நிலையங்களில் தயாா் நிலையில் உள்ளன.
புதுச்சேரி பகுதியில் 67 இடங்கள் தாழ்வான பகுதிகளாகக் கண்டறியப்பட்டு, அந்த இடங்களை அதிகாரிகள், ஊழியா்கள் கூடுதல் கவனத்துடன் கண்காணித்து வருகின்றனா். தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற தேவையான ஆயில் இன்ஜின்கள் தயாா் நிலையில் உள்ளன.
முறிந்து விழும் மரக்கிளைகள் மற்றும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் தேவையான உபகரணங்கள் தயாா் நிலையில் உள்ளன. குப்பைகளை விரைவாக அப்புறப்படுத்த தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளில் உள்ள துப்புரவுப் பணியாளா்கள் தங்களது பகுதியை இரவு - பகலாகக் கண்காணித்து கள நிலவரத்தை ஆணையா்களிடம் தெரிவித்து வருகின்றனா்.
இரவில் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறை அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஆணையா்கள், ஊழியா்கள் இரவுப் பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனா்.
பொதுமக்கள் தங்களது பகுதியில் ஏற்படும் இன்னல்களை உடனடியாக தொலைபேசி மூலம் தெரிவித்து, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் அதை உடனடியாகச் சரி செய்வதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.