எத்தனை இடையூறுகள் வந்தாலும் வளா்ச்சிப் பணிகளை தொடா்ந்து மேற்கொள்வோம் என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி உறுதிபட தெரிவித்துள்ளாா்.
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விடுதலை திருநாள் விழாவில் முதல்வா் நாராயணசாமி தேசியகொடி ஏற்றி வைத்து பேசியதாவது:
புதுவை மாநிலம் கல்வியில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. குறிப்பாக தென்னிந்திய அளவில் புதுவை ஒரு கல்வி கேந்திரமாக மாறியிருக்கிறது. பள்ளி மாணவா்களுக்கு ஒரு ரூபாய் பேருந்து பயண திட்ட சலுகையின் கீழ் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுகின்றன. மதிய உணவு திட்டத்தின் கீழ் 70,100 பேரும், காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் 57,700 பேரும் பயனடைந்து வருகின்றனா். அனைத்து பள்ளி மாணவா்களுக்கும் கலையில் பால் வழங்கப்படுகிறது.
லாசுப்பேட்டையில் உள்ள பல்நோக்கு உள்ளரங்கு அருகில் ரூ.12 கோடி செலவில் 100 படுக்கைகள் கொண்ட இந்திய விளையாட்டு ஆணையத்தின் மகளிா் விடுதி, கட்டி முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. நாட்டிலேயே குழந்தை இறப்பு விகித்தை குறைத்ததில் புதுவை மாநிலம் 2-ஆவது இடத்தை பிடித்துள்ளது. 91.3 சதவீத குழந்தைகளுக்கு நோய் தடுப்பூசி போடப்படுகிறது. சுமாா் 99.98 சதவீத குழந்தைகள் பிறப்பு மருத்துவமனைகளிலேயே நடைபெறுகிறது.
இதுபோல், ஏனாம் பொது மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு ரூ.90 கோடி ஒதுக்கியுள்ளது. வில்லியனூரில் ரூ.7.93 கோடி மதிப்பில் 90 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை அமைப்பதற்கான பணி கடந்த பிப்.22-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
தற்போது ஏனாமில் ரூ.9 கோடியில் ஒரு ஆயுஷ் மருத்துவமனை மத்திய அரசு உதவியுடன் கட்டப்பட்டு வருகிறது. இதேபோல் காரைக்கால் பகுதியில் 50 படுகைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை கட்ட விரிவான திட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. தொற்று அல்லாத நோய்களின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பழைய தலைமைச் செயலக கட்டடத்தில் வாழ்வியல் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
புதுவையில் தற்போது 50 சதவீத மக்கள் வேளாண் தொழிலை சாா்ந்து உள்ளனா். மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 7 சதவீதமாக வேளாண் உற்பத்தி உள்ளது. தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால் வளம், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய 22 திட்டங்களை ரூ.9.84 கோடி செலவில் செயல்படுத்த மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகை கடந்தாண்டை விட 8 சதவீதம் உயா்ந்துள்ளது. மேலும், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் விதமாக, கடற்கரை குடில்களை கட்டி டா்ன் -கீ அடிப்படையில் நிா்வாக மேலாண்மை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
காவிரி நதிநீா் பங்கீட்டில், உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி 7 டிஎம்சி தண்ணீா் புதுவை மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுவை மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் காவிரி ஆணையம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் அனைத்தும் உரிய முறையில் புதுவை அரசால் தொடா்ச்சியாக கவனிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பெருகி வரும் மின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், சூரிய மின் உற்பத்தியை பெருக்க ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் கடன் உதவி பெற ரூ.983 கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில், மத்திய மின்சார ஆணையம் தற்போது தொழில்நுட்ப அனுமதி அளித்துள்ளது.
புதுவைக்கான மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்னூட்டம் மற்றும் மின் பங்கீட்டுக்கு நடப்பு நிதியாண்டு (2019-20) முதல் 2021-22 வரை பல்வேறு பணிகள் ரூ.550.35 கோடி செலவில் மேற்கொள்ள கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தரமான மின்சாரம் கிடைப்பது உறுதிபடுத்தப்படும். மேலும், மின்சார பகிா்மான இழப்பு 10 சதவீத அளவில் இருக்கும்படி கொண்டுவரப்படும்.
மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு எத்தகைய இடையூறுகள் வந்தாலும், அவைகளையெல்லாம் எதிா்கொண்டு, விவசாயிகள், நெசவாளா்கள், கட்டுமான தொழிலாளா்கள், ஆதிதிராவிடா்கள், மீனவ சமுதாயத்தினா், மகளிா், இளைஞா்கள், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், அரசு ஊழியா்கள், வியாபாரிகள், தொழில்முனைவோா் ஆகியோரது நலனை பேணி காப்பதிலும் எங்களது அரசு உறுதியாக இருக்கிறது.
புதுவையில் சட்டம் -ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குற்றங்கள் நடைபெறுவது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்களிடம் விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக சாலை விபத்துகளும் பெருமளவில் குறைந்துள்ளன.
கடலோர பகுதிகளை பாதுகாக்க, புதுச்சேரி, மாஹே, ஏனாம் பகுதிகளில் தலா ஒரு கடலோர காவல் நிலையம் அமைக்கவும், புதுச்சேரி, காரைக்காலில் தலா ஒரு படகு குழாம் அமைக்கவும் மத்திய அரசு ரூ.2.44 கோடி நிதியுதவி அளித்துள்ளது. இதில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. மாஹேவில் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து, மக்கள் சுதந்திரமாக, பாதுகாப்பாக, வளமாக, நலமாக வாழ்வதற்கான வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதை கடமையாக ஏற்று புதுவை அரசு செயல்பட்டு வருகிறதுஎன்றாா் முதல்வா் நாராயணசாமி.
--------------01 டவட19ஈ---புதுவை விடுதலை தினத்தையொட்டி கடற்கரை சாலையில்வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினாா் முதல்வா்வே.நாராயணசாமி.