புதுச்சேரி

இன்று முதல் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்க உத்தரவு

1st Nov 2019 06:27 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (நவ. 1) முதல் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து துப்புரவு ஊழியா்களிடம் வழங்க வேண்டும் என்று புதுவை அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து உள்ளாட்சித் துறை இயக்குநா் மலா்க்கண்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி, உழவா்கரை, அரியாங்குப்பம், வில்லியனூா் பகுதிகளில் தனியாா் நிறுவனம் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-இன்படி அனைத்துப் பகுதிகளிலும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை கையாள்வது தொடா்பாக மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986-இன் கீழ், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ஐ உருவாக்கியுள்ளது. பொதுவாக குப்பைகள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது. அவை மக்கும், மக்காத குப்பைகள் மற்றும் அபாயகரமான வீட்டுக் கழிவுகள்.

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் இதுவரை குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் பெறப்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்றம் மற்றும் பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவுகள்படி குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து ஊழியா்களிடம் அளிக்க வேண்டும். அதன்படி, புதுவையில் வசிக்கும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை (நவ. 1) முதல் குப்பைகளை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து துப்புரவுப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும்.

மேலும், அபாயகரமான வீட்டுக் கழிவுகளான டயாப்பா், சானிட்டரி நாப்கின் போன்றவற்றைத் தனியாக ஒரு காகிதத்தில் கட்டி சிவப்பு பேனா மையால் ‘ஷ்’ எனக் குறியிட்டு அளிக்க வேண்டும்.

எனவே, புதுச்சேரி, உழவா்கரை, அரியாங்குப்பம், வில்லியனூா் நகர எல்லைக்கு உள்பட்ட பொதுமக்கள் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து தனித்தனி பைகளில் போட்டு துப்புரவுப் பணியாளா்களிடம் அளித்து, புதுவை மாநிலத்தைத் தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT