மத்தியில் ராகுல் தலைமையில் மதச் சார்பற்ற அரசு அமையும்: புதுவை முதல்வர் நாராயணசாமி

மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் மதச் சார்பற்ற அரசு அமையும் என புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கூறினார்.

மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் மதச் சார்பற்ற அரசு அமையும் என புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கூறினார்.
 புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ராஜீவ் காந்தி நினைவு நாள் நிகழ்ச்சியில் முதல்வர் வே.நாராயணசாமி பேசியதாவது: அரசியலுக்கு வர விருப்பமில்லாமல் இருந்த ராஜீவ் காந்தி, அவரது தாய் இந்திரா காந்தியின் அழைப்பை ஏற்று, கட்சியில் பொறுப்பேற்று செயல்பட்டார். அவரது ஆட்சியில் கிராமத்துக்கும், பெண்களுக்கும் முன்னுரிமை அளித்தார். பெண்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் விதமாக பஞ்சாயத்துத் தேர்தல்களில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். கணினி, தொலைபேசி பயன்பாட்டை எளிமையாக்கினார். தற்போது ராகுல் காந்தி கட்சித் தலைவராகவும், பிரியங்கா காந்தி கட்சியின் பொதுச் செயலராகவும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.
 மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு குழப்பி வருகின்றன. 2004-இல் வாஜ்பாய் மீண்டும் பிரதமராக வருவார் என்றும், 2009-இல் மீண்டும் பிரதமராக மன்மோகன் சிங் வரமாட்டார் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால், இவை இரண்டும் பொய்த்துவிட்டன.
 அதேபோல, புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி இழுபறி என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், வைத்திலிங்கம் அமோகமாக வெற்றி பெறுவார். தட்டாஞ்சாவடி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் அமோக வெற்றி பெறுவார்.
 பிரதமர் மோடியின் செல்வாக்கு உச்சகட்டத்தில் இருந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலிலேயே பாஜக 270 இடங்களுக்கு மேல் பெறவில்லை. தற்போது எப்படி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியும்? பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியான பின்னர், பங்குச் சந்தையில் 6 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்தன. இதன் மூலம், ரூ.3 லட்சம் கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது. இதற்காகத்தான் இந்த கருத்துக் கணிப்புகள் வெளியாகின.
 வாக்கு எண்ணிக்கையின் போதும், மறுநாள் முடிவு அறிவிக்கும் வரையிலும் காங்கிரஸார் (முகவர்கள்) விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில், பாஜக தில்லுமுல்லு செய்யக்கூடும்.
 கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் முடிவுக்குப் பின்னர் ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமையும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com