கும்பாபிஷேகம் நடத்துவதில் பிரச்னை: கோயில் சுற்றுச்சுவர் இடிப்பு

கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், அந்தக் கோயிலின் சுற்றுச் சுவர் செவ்வாய்க்கிழமை இடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், அந்தக் கோயிலின் சுற்றுச் சுவர் செவ்வாய்க்கிழமை இடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 நெல்லித்தோப்பு அண்ணா நகர் வரிவாக்கம் 17-ஆவது குறுக்குத் தெருவில் வரசித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை இடித்துவிட்டு, புதிதாக கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருப்பணிகளும் நடைபெற்று வந்தன.
 திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த இரு தரப்பினரிடையே போட்டி ஏற்பட்டது. ஒரு தரப்பினர் ஜூன் 14-ஆம் தேதியும், மற்றொரு தரப்பினர் ஆகஸ்ட் 25-ஆம் தேதியும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு துண்டுப் பிரசுரம் அச்சிட்டு விநியோகம் செய்து வந்தனர்.
 இதனால், கோயிலுக்கு எந்தத் தேதியில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதில் அந்தப் பகுதி மக்களிடையே குழப்பம் நிலவி வந்தது. இதனிடையே, ஒரு தரப்பினர் கோயிலை பூட்டிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. மற்றொரு தரப்பினர் கோயிலை திறக்கும்படி கூறினர். ஆனால், கோயில் திறக்கப்படவில்லை.
 இதனால், அதிருப்தியடைந்த அந்தத் தரப்பினர் செவ்வாய்க்கிழமை திடீரென பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு வந்து கோயில் சுற்றுச்சுவரை இடித்துத் தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதற்கு, மற்றொரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்கவே அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இது பற்றி அறிந்த அந்தப் பகுதி மக்கள் கோயிலுக்கு முன் திரண்டனர்.
 இதுகுறித்து தகவலறிந்த உருளையன்பேட்டை காவல் ஆய்வாளர் தனசெல்வம் தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இரு தரப்பினரும் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்வதாகக் கூறியதை அடுத்து, பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com