பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

ஜூன் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 1 (பழைய, புதிய பாடத் திட்டம்), பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு

ஜூன் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 1 (பழைய, புதிய பாடத் திட்டம்), பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு எழுத விரும்பும் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கல்வித் துறை இணை இயக்குநர் எம். குப்புசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாதவர்கள், 2018, 2019 -ஆம் ஆண்டுகளில் மார்ச், ஜூனில் நடைபெற்ற பிளஸ் 1 பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாதவர்கள் வருகிற ஜூனில் நடைபெற உள்ள சிறப்புத் துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வாயிலாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் மட்டுமே இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலும். தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று, மே 3 -ஆம் தேதி பிற்பகல் முதல் 8 -ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். தனியார் இணையதள மையங்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது.
பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு வருகிற ஜூன் 6 ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 14 -ஆம் தேதி முதல் 
21- ஆம் தேதி வரையும் நடைபெறும். தேர்வுகளுக்கான கால அட்டவணையை ‌w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளத்தில் காணலாம்.
செய்முறைத் தேர்வு...: செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல், எழுத்துத் தேர்வில் மட்டும் பங்கேற்று, எழுத்துத் தேர்வு, அக மதிப்பீட்டில் மொத்தம் 35, அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறாத தேர்வர்கள், சிறப்புத் துணைத் தேர்வின் போது, செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதுமானது. இந்தத் தேர்வர்கள் எழுத்துத் தேர்வை மீண்டும் எழுத இயலாது.
செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல், எழுத்துத் தேர்வில் மட்டும் பங்கேற்று, எழுத்துத் தேர்வு, அக மதிப்பீட்டில் மொத்தம் 35 மதிப்பெண்களுக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறாத தேர்வர்கள், சிறப்புத் துணைத் தேர்வின் போது, எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு ஆகிய இரண்டிலும் பங்கேற்க வேண்டும். 
செய்முறை, எழுத்துத் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெறாத தேர்வர்கள், எழுத்துத் தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது. இந்தத் தேர்வர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வு செய்ய வேண்டியதில்லை.
தேர்வுக் கட்டணம்...: தனித் தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ. 50 (இதர கட்டணம் ரூ. 35), இணையதள பதிவுக் கட்டணம் ரூ. 50 சேர்த்து பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். 
தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையங்கள் குறித்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் அறிந்து கொள்ளலாம்.
பதிவின் போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமாகனது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம், தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே முறையாக அனுமதி வெளியிடப்படும் எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com