சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

DIN | Published: 03rd May 2019 08:12 AM

புதுவை மாநில அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 2,326 இடங்களுக்கு வருகிற 15 -ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று புதுவை கல்வித் துறை செயலர் அ.அன்பரசு தெரிவித்தார்.
 புதுவை மாநிலத்தில் லாசுப்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, லாசுப்பேட்டை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, வரிச்சிக்குடி காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்கால் மேடு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, ஏனாம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பாலிடெக்னிக் கல்லூரி, மாஹே இந்திரா காந்தி பாலிடெக்னிக் கல்லூரி என 6 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.
 இந்தக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய 2019 - 20 ஆம் கல்வி ஆண்டுக்கான விரிவான மாணவர் சேர்க்கை தகவல் கையேடு வெளியிடும் நிகழ்ச்சி புதுவை
 தலைமைச் செயலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்வில் கையேட்டை மாநில கல்வித் துறை செயலரும், சென்டாக் தலைவருமான அ.அன்பரசு வெளியிட்டார். சென்டாக் துணைத் தலைவரும், சுகாதாரத் துறை செயலருமான பிரசாந்த் குமார் பாண்டா, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் எஸ்.மாணிக்க
 தீபன், உயர்கல்வித் துறை இயக்குநர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பி.டி. ருத்ரகவுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இதையடுத்து, கல்வித் துறை செயலர் அ.அன்பரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தற்போது புதுவை மாநிலத்தில் உள்ள 6 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 2,326 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், வழக்கமான இடங்கள் 1,372, பிளஸ் 2, ஐடிஐ முடித்துவிட்டு சேரும் மாணவர்களுக்கான லேட்டரல் நுழைவுக்கான இடங்கள் 809, மாற்றுத் திறனாளிகளுக்கான இடங்கள் 25, பகுதி நேர படிப்புக்கான இடங்கள் 120 உள்ளன.
 இந்த இடங்களுக்கு மாணவர்கள் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் மே 15 -ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். கடந்தாண்டைப் போலவே நிகழாண்டும் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும்.
 இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தனியார் மையங்களில் அதிக கட்டணம், காலதாமத்தைக் குறைக்க அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உதவி மையங்களை ஏற்படுத்தி, விண்ணப்பிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இதை பொதுசேவை மையங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.
 பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக, அந்த இடங்களை அதிகரிப்பதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் அந்த இடங்களுக்கான அனுமதி கிடைத்துவிடும். அதைத் தொடர்ந்து, மேற்கண்ட இடங்களில் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படும்.
 பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்க வருவாய்த் துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம்.
 விரைவில் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான அறிவிப்பு: புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், கால்நடை, பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து பாடப் பிரிவுகளுக்கும், கல்லூரிகளுக்கும் ஒருங்கிணைந்த முறையில் சென்டாக் மூலம் விண்ணப்பிக்கும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்தாண்டு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
 நிகழாண்டு சென்டாக்கில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் போது, மாணவர்கள் தங்களது தேர்வெண்ணைப் பதிவிட்டால் போதும், அவர்களது மதிப்பெண், எந்தப் பள்ளி உள்ளிட்ட விவரங்களைத் தானாக எடுத்துக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் மதிப்பெண் சான்றிதழைச் சரிபார்க்கும் நேரம் குறையும். இதற்காக தமிழ்நாடு, ஆந்திரம், கேரள மாநிலங்களின் கல்வித் துறையுடன் இணைந்து, மாணவர்களின் தகவல்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளோம். மாணவர்கள், பெற்றோர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 பொறியியல், கால்நடை மருத்துவம், வேளாண்மை, கேட்டரிங் படிப்புகளுக்கான இடங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
 வரும் கல்வியாண்டுகளில் பொதுத் தேர்வுக்கு முன்னதாகவே சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல, அடுத்த ஆண்டு முதல் வருவாய்த் துறையின் சாதி, இருப்பிடச் சான்றிதழ்களையும் இணையதளம் மூலம் சரிபார்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
 இதன் மூலம் உயர்கல்வியைக் குழப்பமின்றி தேர்ந்தெடுக்க உதவுவதுடன், தகுதி அடிப்படையில், அதிக செலவில்லாமல், காலதாமதமின்றி அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க வழிவகை ஏற்படும் என்றார் அன்பரசு.
 
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு
ப.சிதம்பரம் கைதுக்கு புதுவை காங்கிரஸ் கண்டனம்
புதுவையில் இட ஒதுக்கீட்டு அளவை 69 சதவீதமாக உயர்த்தக் கோரிக்கை
தவறு செய்தால் இயற்கை நிச்சயம் தண்டிக்கும்: புதுவை ஆளுநர் கிரண் பேடி
விவசாயிகளுக்கு பார்த்தீனியம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி