புதுச்சேரி

புதுவைக்கு மாநில அந்தஸ்து: எம்.பி. தலைமையில் குழு அமைக்கக் கோரிக்கை

29th Jul 2019 10:03 AM

ADVERTISEMENT

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் வழிகாட்டிக் குழு அமைக்க வேண்டும் என்று முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 23-ஆம் தேதி மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி புதுவைக்கு மாநில அந்தஸ்து அளிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்று அறிவித்தார். இது துரதிருஷ்டவசமானது. ஜனநாயக மாண்பு, மக்களாட்சியின் தத்துவம், மக்களின் நீண்ட கால விருப்பத்துக்கு எதிரானது.
புதுவைக்கு மாநில அந்தஸ்து அளிப்பதை மத்திய உள்துறை அமைச்சகம் கொள்கை அளவில் ஏற்கெனவே ஒப்புக்கொண்டது. கடந்த 1998-இல் இருந்த பாஜக அரசு மக்களவையில் இதை அறிவித்தது. அப்போதைய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்  மதன்லால் குரானா 10.7.1998-இல்  மத்திய அரசு,  புதுவைக்கு மாநில அந்தஸ்து தருவதில் உறுதியாக இருக்கிறது என்று பதிலளித்தார்.
பின்னர், சுஷ்மா சுவராஜ் தலைமையிலான உள்துறை நிலைக் குழு மூன்று நாள்கள் புதுச்சேரிக்கு வந்து தங்கி, மாநில அந்தஸ்து சம்பந்தமாக ஆய்வு செய்தது. அப்போதைய முதல்வர் என்.ரங்கசாமியை 18.6.2005-இல் சந்தித்த பின்னர், இந்தக் குழு புதுவைக்கு சிறப்புத் தகுதியுடன் கூடிய தனி மாநில அந்தஸ்து வழங்கும் முடிவை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
இந்த உண்மைகளை தற்போதைய மத்திய அரசுக்கு முதல்வர் நாராயணசாமி கொண்டு செல்ல வேண்டும். மாநில அந்தஸ்தை பெறுவதில் முதல்வருக்கு உண்மையில் அக்கறை இருப்பின், அவர் அதுதொடர்பான சாத்தியக் கூறு அறிக்கை ஒன்றை வல்லுநர் குழுவால் தயாரிக்க வேண்டும்.
அந்த அறிக்கையை புதுவை அரசின் செயலர் குழு ஒன்று உள்துறை அதிகாரிகளுடன் விவாதித்து, மாநில அந்தஸ்து கோருவதன் நியாயத்தை உணர்த்த வேண்டும். அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து இந்த அறிக்கையை முதல்வர் நாராயணசாமி, பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும் சமர்ப்பித்து, மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்.
புதுவையின் மாநில அந்தஸ்து தில்லியின் மாநில அந்தஸ்துடன் தொடர்பு கொண்டுள்ளதால், இரு மாநில முதல்வர்களும் இந்த விஷயத்தில் இணைந்து செயல்பட வேண்டும்.
தேவைப்படின், மக்களவையில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு, அவர்கள் கையொப்பமிட்ட விண்ணப்பத்தை பிரதமரிடமும்,  குடியரசுத் தலைவரிடமும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு புதுவை தொகுதி மக்களவை உறுப்பினர் வெ. வைத்திலிங்கம் தலைமையில்,  மாநிலங்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட 10 பேர் கொண்ட குழுவை உடனடியாக அமைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான, நேர்மையான நடவடிக்கைகள் மட்டுமே புதுவை மாநில மக்களுக்கு நீதியைப் பெற்று தரும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT