புதுச்சேரி

புதிய வழித் தடங்களில் இயக்கப்படுமா பிஆர்டிசி பேருந்துகள்? க. கோபாலகிருஷ்ணன்

29th Jul 2019 10:04 AM

ADVERTISEMENT

புதிய வழித் தடங்களில் பிஆர்டிசி பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிஆர்டிசி (புதுவை சாலைப் போக்குவரத்துக் கழகம்) சார்பில் புதுவை பிராந்தியத்தில்100 பேருந்துகள், காரைக்காலில் 32, மாஹேவில் 4, ஏனாமில் 3 என மொத்தம் 141 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 60-க்கும் மேற்பட்ட வழித் தடங்களில் 57 இருக்கைகள் கொண்ட 50 நகர சாதாரண பேருந்துகள், 38 இருக்கைகள் கொண்ட 50 விரைவு மற்றும் சாய்வு இருக்கை வசதி கொண்ட பேருந்துகள், 18 இருக்கைகள் கொண்ட 25 சிற்றுந்துகள், 2 குளிர்சாதனப் பேருந்துகள், 10 சொகுசுப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் நாளொன்றுக்கு ரூ. 13 லட்சம் வசூலாகிறது. பிஆர்டிசி புதுவை மாநில பிராந்தியங்களில் மட்டுமல்லாது தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களின் பல பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்கி வருகிறது. 
புதுச்சேரி, காரைக்காலிலிருந்து பொதுமக்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்களுக்கு செல்கின்றனர். இதேபோல, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, புதுவை மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகின்றனர். இவர்கள் பேருந்து வசதியையே நாடுகின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதியும், ஆன்மிகம், சுற்றுலாவுக்கு பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்லவும் புதிய வழித் தடங்களில் அதிகளவில் பிஆர்டிசி பேருந்துகளை இயக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், மாணவர்களும் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து பிஆர்டிசி ஊழியர்கள் சங்கத் தலைவர் பி.டி.வேலையன், சுப்புராஜ் ஆகியோர் கூறியதாவது: பிஆர்டிசி என்றாலே வேகமும், குறித்த நேரத்தில் பயண இலக்கை அடைய முடியும் என்பதுமே அதன் அடையாளமாக இருந்தது. ஆனால், தற்போது 771 பணியாளர்கள் பணியாற்றினாலும், பேருந்துகளைச் சரிவர பராமரிக்காதது, நேர மேலாண்மையில் தொய்வு உள்ளிட்ட குறைபாடுகளால் பிஆர்டிசியின் நற்பெயர் கேள்விக்குறியாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பிஆர்டிசி நஷ்டத்தில் இயங்குகிறது. இதற்கு முறையான நிர்வாக மேலாண்மை இல்லாததும், புதிய வழித் தடங்களில் பேருந்துகளை இயக்காததுமே காரணம். எனவே, நிர்வாகத்தைச் சீர்படுத்தி, அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து, புதிய வழித் தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும், புதுவை கல்வித் துறை பேருந்துகளை பிஆர்டிசி மூலம் இயங்க வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே பிஆர்டிசி லாபத்தில் இயங்கும் என்றனர்.
இதுகுறித்து பிஆர்டிசி மேலாண் இயக்குநர் டி.குமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: புதுவை அரசு பிஆர்டிசி-க்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கி வருகிறது. அதே போல, நிகழாண்டு நிதிநிலை அறிக்கையிலும் போதிய நிதி ஒதுக்கினால், புதிய வழித் தடங்களில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT