அரசுத் துறை வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திகவினர் 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரியில் உள்ள அரசுத் துறை வங்கியை முற்றுகையிட்டு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை சிலர் எரிக்க முயன்றனர். போலீஸார் இதைத் தடுத்து நிறுத்தியதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
இதனிடையே, பொது இடத்தில் தீப்பற்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக பெரியக்கடை காவல் உதவி ஆய்வாளர் முருகன் அளித்த புகாரின் பேரில், தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி காளிதாஸ் உள்பட 4 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ், போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.