புதுச்சேரி

உயர் ஜாதியினருக்கான இட ஒதுக்கீடு: தீர்வு காண வலியுறுத்தல்

22nd Jul 2019 08:11 AM

ADVERTISEMENT

உயர் ஜாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி தீர்வு காண வேண்டும் என புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை: சென்டாக் நிர்வாகம் மருத்துவச் செயலரின் மொழிதலின் பேரில், கடந்த 14-ஆம் தேதி (இ.டபிள்யூ.எஸ்.) முற்பட்ட ஜாதியினருக்கான 10 சதவீத பொருளாதார இட ஒதுக்கீடு முறையை கொண்டுவந்துள்ளது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு எஸ்.சி. சமுதாயத்துக்கு 16 சதவீதத்துக்கு 17 இடங்கள் ஒதுக்கியுள்ள அரசு, 10 சதவீதம் பெறும் இ.டபிள்யூ.எஸ். மாணவர்களுக்கு 18 இடங்கள் ஒதுக்கியது எப்படி சாத்தியமாகும். 
18 சதவீதம் பெறும் எம்.பி.சி. சமூகத்துக்கு 20 இடங்களும், 11 சதவீதம் பெறும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 12 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தகைய செயல் சமூக நீதியை குழிதோண்டி புதைப்பதாகும். இ.டபிள்யூ.எஸ். முற்பட்ட ஜாதி பிரிவினருக்கு மட்டும் மொத்த அரசு மருத்துவக் கல்லூரி இடமான 180-இல் 10 சதவீத இடங்களை புதுவை அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி, ஓ.பி.சி, பி.சி.எம், இ.பி.சி, பி.டி உள்ளிட்ட மற்ற சமுதாய மாணவர்களுக்கு மட்டும் புதுவை மாநிலத்துக்கான 108 இடங்களில் இருந்து இடம் ஒதுக்குவது ஏன்.
சமூக நீதியை பறிக்கும் இந்த பொருளாதார இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்துவதற்கு தமிழகத்தைப்போல புதுச்சேரியிலும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT