புதுச்சேரி

பாகூர் மூலநாதர் கோயில் தேரோட்டம்

16th Jul 2019 07:04 AM

ADVERTISEMENT

புதுச்சேரி பாகூரில் உள்ள மூலநாதர் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே. நாராயணசாமி ஆகியோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பழைமை வாய்ந்த இந்தக் கோயில் திருவிழா கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 11 ஆம் தேதி பாரிவேட்டை, 13 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றன. நாள்தோறும்  சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் சமேத சுவாமி திருவீதியுலா நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, காலையில் வேதாம்பிகை சமேத மூல நாத சுவாமி, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடிகளின் ஒலியுடன் தேரில் எழுந்தருளினார். இதையடுத்து, புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே. நாராயணசாமி, தனவேலு எம்எல்ஏ உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் தொடங்கியது. 
இவர்களைத் தொடர்ந்து, திரளான பக்தர்களும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் பாகூரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் நிலையை அடைந்தது. இதில், திரளான பக்தர்களும், அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.
பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளால் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. 
முன்னதாக, ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே. நாராயணசாமி உள்ளிட்டோருக்கு கோயில் சார்பில் ஒரே நேரத்தில் கும்ப மரியாதை வழங்கப்பட்டது. 
அப்போது ஆளுநரும், முதல்வரும் அருகருகே நின்று தேரை இழுத்தாலும் உரையாடலைத் தவிர்த்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT