புதுவையில் பிராந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது.
நெல்லித்தோப்பு தொகுதி இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா தலைமை வகித்தார். தொகுதி செயலர் செ.நடராஜன், மாநில மாணவரணி அமைப்பாளர் எஸ்.பி.மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி இளைஞரணி அமைப்பாளர் சந்துரு, மாணவரணி அமைப்பாளர் சந்திரசேகர் ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் உயர் கல்வியில் பிராந்திய இட ஒதுக்கீட்டில் சென்டாக் பட்டியலில் புதுவை பிராந்தியம் பின்தங்கி உள்ளது. இட ஒதுக்கீட்டில் புதுவை பகுதிக்கு 75 %, காரைக்காலுக்கு
18 %, மாஹேவுக்கு 4 %, ஏனாம் பகுதிக்கு 3 % என உள்ளது. இதில், புதுச்சேரி பகுதிக்கு ஒதுக்கப்பட்ட75 சதவீதத்தில் இருந்து காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதி மாணவர்கள் இடங்களை பெற முடியும். ஆனால், காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஓர் இடத்தைக்கூட புதுவை பிராந்திய மாணவர்கள் பெற முடியாது. இதை மாற்றியமைக்க வேண்டும்.
உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது. எனவே, அதை புதுவையில் அமல்படுத்தக் கூடாது. தமிழகம், புதுவைக்கு நீட் தேர்வில் விலக்களிக்க வேண்டும். ஹிந்தி திணிப்பைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.