கோயில் சொத்துகள் கொள்ளை போவதைத் தடுத்து, அவற்றைப் பாதுகாக்கக் கோரி இந்து முன்னணியினர் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சாரம் அவ்வைத் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலர் ஜெ.ரமேஷ் தலைமை வகித்தார். பொருளாளர் ஜி.செந்தில்குமரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக் கணக்கான ஏக்கர் கணக்கில் இருந்த கோயில் சொத்துகள் தற்போது சில நூறு ஏக்கர்களாக சுருங்கிவிட்டன. பல கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள், சிலைகள் உள்ளிட்ட பொருள்களும் கொள்ளை போயுள்ளன. கட்டண தரிசனத்தை அமல்படுத்தி, கோயில்களில் ஏழை, பணக்காரன் என்ற பொருளாதாரத் தீண்டாமையை உருவாக்குவதற்கு அரசே காரணமாக இருக்கிறது.
எனவே, கோயில் சொத்துகள் கொள்ளைப் போவதைத் தடுக்க வேண்டும், கோயில்களை பழையபடி இந்து சான்றோர், ஆன்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும், கோயில்களிலிருந்து அரசு நிர்வாகம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் மாவட்டத் தலைவர் சே. சிவா எழுச்சியுரையாற்றினார். உழவர்கரை நகரச் செயலர் டி.ஹரி நன்றி கூறினார்.