புதுச்சேரி

போலீஸாருடன் மோதலில் ஈடுபட்ட ஐஆர்பிஎன் காவலர் பணியிடை நீக்கம்  

12th Jul 2019 08:36 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் மதுக் கடையில் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்ட ஐஆர்பிஎன் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
 இந்திய ரிசர்வ் பட்டாலியனின் புதுச்சேரி பிரிவு (ஐஆர்பிஎன்) காவலர் மணிகண்டன் தனது நண்பர்கள் 3 பேருடன் கடந்த 2- ஆம் தேதி இரவு பெரியகடை காவல் நிலையத்துக்கு உள்பட்ட மதுக் கடையில் மது அருந்தினாராம். அப்போது, நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட மதுக் கடை மேலாளர் இதுகுறித்து பெரியகடை போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
 அதன் பேரில், அங்கு வந்த பெரியகடை காவலர் முருகன், அவர்களை விலக்கிவிட முயன்றார். அப்போது, காவலர் முருகனுக்கும், ஐஆர்பிஎன் காவலர் மணிகண்டனுக்கும் மோதல் ஏற்பட்டதாம்.
 இதையடுத்து, பெரியகடை காவல் உதவி ஆய்வாளர்கள் விரைந்து சென்று மதுக் கடையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட இரு காவலர்களிடமும் காவல் துறை உயரதிகாரிகள் தனித் தனியாக விசாரணை நடத்தினர்.
 இதனிடையே, மதுக் கடையில் மோதலில் ஈடுபட்ட விடியோ கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.
 இதைத் தொடர்ந்து, பெரியகடை காவலர் முருகன் அளித்த புகாரின் பேரில், ஐஆர்பிஎன் காவலர் மணிகண்டன், அவரது நண்பர்களான வினோத், சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய 4 பேர் மீதும் கடந்த 3 -ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.
 இதுகுறித்து ஐஆர்பின் கமாண்டரும், முதுநிலை எஸ்.பி.யுமான அபூர்வ குப்தாவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பேரில், ஐஆர்பிஎன் காவலர் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை அவர் உத்தரவிட்டார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT