புதுச்சேரி

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு என்.ஆர்.காங்கிரஸ் வரவேற்பு

6th Jul 2019 12:56 PM

ADVERTISEMENT

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு என்.ஆர்.காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்தது.
இதுகுறித்து அந்தக் கட்சித் தலைவர் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பொருளாதாரத்தை வலுப்பெற செய்யும் வகையில், மத்திய நிதிநிலை அறிக்கை  உள்ளது. உயர் கல்வித் திட்டத்துக்கு ஆணையம், தேசிய விளையாட்டுக் கல்விக்கு வாரியம் என்று பல வகையில் பாராட்டத்தக்க அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, முத்ரா திட்டத்தின் கீழ், பெண்களுக்கு ரூ. ஒரு லட்சம் கடன் வழங்குவதற்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
பார்வையற்றோருக்கு பயன்படும் வகையில் ரூ. 1, ரூ. 2, ரூ. 5, ரூ. 10, ரூ. 20 உள்ளிட்ட நாணயங்கள் வெளியிடும் திட்டமும் வரவேற்புக்குரியது. கழிவுகளைச் சுத்தம் செய்ய ரோபோக்கள் பயன்படுத்தும் திட்டம், சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளிட்டவை அனைவரும் பாராட்டத்தக்க வகையில் உள்ள திட்டங்களாகும்.
1.25 லட்சம் கி.மீ. தொலைவு கிராமச் சாலைகளை மேம்படுத்துதல், 1.5 கோடி வீடுகளை கிராமங்களில் கட்டும் திட்டம், அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் 2022-ஆம் ஆண்டுக்குள் சமையல் எரிவாயு அளித்தல் உள்ளிட்ட திட்டங்கள் கிராம வாழ்க்கைக்கு புத்தொளி பாய்ச்சும். ஆக, மொத்தத்தில் இது நாட்டின் வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT