புதுவை அரசின் சமூக நலத் துறை சார்பில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெற்ற இந்தப் பேரணியை முதல்வர் வே.நாராயணசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து அவர் மாணவ, மாணவிகளுக்கு விதைப் பந்துகளையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்வில் சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வுப் பேரணியில் பல்வேறு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கைகளில் ஏந்தியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியபடியும் சென்றனர். புதுச்சேரியின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி கல்வித் துறை வளாகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் திரளான அரசுத் துறைகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.