புதுச்சேரியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், சாலையோரங்களில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மே 22 -ஆம் தேதி அரியாங்குப்பம்
புறவழிச் சாலையில் விவேக்நாத் என்ற காவலர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாலையோரம் அமர்ந்து மது அருந்திய 2 பேரை அவர் கண்டித்தாராம். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர்கள், காவலர் விவேக்நாத்தை பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததாகவும், தகாத வார்த்தையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள், ஜவஹர்
நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ரஞ்சித், அவரது நண்பர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார், புதுச்சேரி நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்று,
வழக்குரைஞர் ரஞ்சித், அவரது நண்பர் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து
வருகின்றனர்.