புதுச்சேரி

ஆளுநர் கிரண் பேடி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் 

6th Jul 2019 12:55 PM

ADVERTISEMENT

சென்னையின் குடிநீர் பற்றாக்குறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மீது விரைவில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் மேலும் கூறியதாவது:
புதுவை மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மலிவு விளம்பரத்துக்காக தமிழக அரசையும்,  தமிழக மக்களைப் பற்றியும் வரம்பு மீறி, சர்ச்சை கருத்தைத் தெரிவித்தார். அவரது இந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும். தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மக்களவையில் இந்த பிரச்னை குறித்து விவாதம் வந்த போது, ஆளுநர் கிரண் பேடி வருத்தம் தெரிவித்ததாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மத்திய அரசு விளக்கம் கேட்ட பிறகு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். 
யார் குறித்து பேசினாரோ அவர்களிடம்தான் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். கிரண் பேடி மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
புதுவை ஆளுநரின் சர்ச்சை கருத்து குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் கருத்து கேட்டு, சட்ட ரீதியான நடவடிக்கையை ஓரிரு நாள்களில் மேற்கொள்ளோம்.
புதுவை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை (ஜூலை 6) ஆளுநர் கிரண் பேடி தலைமையில் மாநில திட்டக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
ஆளுநர் முதல் முறையாக பதவியேற்ற போது, திட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் என்ற அடிப்படையில் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தற்போது நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க இதுவரை எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. உண்மையில் ஆளுநரின் செயல்பாடுகளை முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பவராக இருந்தால், இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்றார் அன்பழகன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT