புதுச்சேரி

பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்கு

4th Jul 2019 09:03 AM

ADVERTISEMENT

வில்லியனூர் அருகே திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
 வில்லியனூர் அருகே உள்ள சிவராந்தகம்பேட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் (27). பி.டெக். பட்டதாரியான இவர், மாநில இளைஞர் காங்கிரஸ் சமூக வலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
 அதே கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண், ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். இதனிடையே, தமிழரசன், அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, கர்ப்பமாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்தப் பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவைக் கலைத்ததாகத் தெரிகிறது.
 இந்த நிலையில், அந்தப் பெண் மீண்டும் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த தமிழரசன், அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியதுடன், தனது தாய் பரமேஸ்வரி, நண்பர் சதீஷ்குமார் ஆகியோருடன் சேர்ந்து அந்தப் பெண்ணை மிரட்டி, கருவைக் கலைத்ததாகக் கூறப்படுகிறது.
 இதுகுறித்து அந்தப் பெண் வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்தில் அண்மையில் புகாரளித்தார்.
 இதுதொடர்பாக, இளைஞர் காங்கிரஸ் மாநிலப் பொறுப்பாளர் தமிழரசன், அவரது தாய் பரமேஸ்வரி, நண்பர் சதீஷ்குமார், கருவைக் கலைத்த மருத்துவர் மதன் ஆகிய 4 பேர் மீதும் உதவி ஆய்வாளர் ஷியமளா வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT