புதுச்சேரி

தொழில் தொடங்குவதற்கான இணைய வாசல் தொடக்கம்

4th Jul 2019 08:47 AM

ADVERTISEMENT

புதுவையில் தொழில் தொடங்குவதற்கான இணையவாசலை முதல்வர் வே.நாராணசாமி புதன்கிழமை தொடக்கிவைத்தார்.
 மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை, ஒவ்வொரு ஆண்டும் தொழில் சீர்திருத்த செயல் திட்டத்துக்கு இணங்க, தொழில்முனைவோர் எளிய முறையில் தொழில் தொடங்கும் வகையில், ஒவ்வொரு மாநிலமும் செயல்படுத்திடத் தேவையான சீர்திருத்தங்களை வெளியிடும்.
 அதன்படி, தொழில் தொடங்குதல், நில ஒதுக்கீடு பெறுதல் மற்றும் இடத்துக்கான அனுமதி மற்றும் கட்டட வரைபட ஒப்புதல் பெறுதல், சுற்றுச்சூழல்/மாசு அனுமதி பெறுதல், தொழிலாளர் ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றுதல், தொழில்சாலை கட்டடம் மற்றும் இயந்திர அமைப்பு வரைபட ஒப்புதல் பெறுதல், வருவாய் சட்டங்களின் கீழ் ஒப்புதல் பெறுதல், தேவையான ஆய்வுகளை மேற்கொள்ளுதல், ஒப்பந்தப் பணிகளை செயல்படுத்துதல் ஆகியவற்றில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் வெளியிடப்படுகின்றன.
 தொழில்முனைவோர் பல்வேறு துறைகளின் உரிமங்களை எளிதாக பெறுவதற்கு தேவையான சீர்திருத்தங்களை செய்வதே இதன் நோக்கம் ஆகும். ஒவ்வொரு மாநிலமும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் முறையை மதிப்பாய்வு செய்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, தேசிய அளவில் மாநிலவாரியாக தரம் நிர்ணயிக்கப்படுகிறது.
 அவ்வாறு தேசிய அளவில் புதுவை மாநிலம் அதிக மதிப்பெண் பெறுவதற்காக, புதுவையின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையானது தேசிய தகவல் தொழில்நுட்ப மையத்தின் உதவியுடன் ங்ர்க்க்ஷ.ல்ஹ்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணைய வாசலை தொடங்கியுள்ளது.இதன் அறிமுக விழா புதுவை சட்டப் பேரவையில் உள்ள குழு அறையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சர் ஷாஜகான் தலைமை வகிக்க, முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில் தொழில் துறைச் செயலர் சரண், இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 நிகழ்ச்சியின்போது, முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 2016-இல் புதுவை மாநிலத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு அமைந்தவுடன் புதிய தொழில் கொள்கையை கொண்டுவந்தோம். அதைத் தொடர்ந்து, வெளிநாடு, தென் மாநிலம் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த நிறைய முதலீட்டாளர்கள் புதுவையில் தொழில் தொடங்குவது தொடர்பாக எங்களிடம் பேசினர். இதற்கிடையில் மத்திய அரசு ரூபாய் மதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி ஆகியவைகளை அறிமுகப்படுத்தியதால், தொழில்சாலைகள் வருவதில் தடை ஏற்பட்டது.
 புதிய தொழில் கொள்கையில் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பித்து 30 நாள்களுக்குள் அனுமதி அளிக்காவிட்டால், அனுமதி அளித்ததாக எடுத்துக்கொண்டு தொழில் தொடங்கலாம் என குறிப்பிட்டுள்ளோம்.
 வருவாய்த் துறை, தொழில் துறை, தொழிலாளர் துறை, விவசாயத் துறை, பொதுப்பணித் துறை, புதுவை நகர மற்றும் திட்ட குழுமம் உள்ளிட்ட தொழில்சாலை தொடங்க அனுமதி தரும் துறைகளிடம் இருந்து இருந்த இடத்தில் இருந்தே அனுமதி பெறவும், அதற்கான பணத்தை செலுத்தவும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம்.
 தற்போதைய முறையில் மனு அளித்து எத்தனை நாள் ஆகிறது, அந்த மனு தற்போது எந்த துறையில் உள்ளது என்பதையும் அறிந்து கொள்ள முடியும். அதன் மூலம் குறைகளை நிவர்த்தி செய்து, அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்.
 புதிய தொழில்கொள்கை அறிமுகப்படுத்திய பின்னர் 700-க்கும் மேற்பட்ட தொழில்சாலைகள் தொடங்க அனுமதி கேட்டுள்ளன. அவற்றில் அனுமதி பெற்று 300 தொழில்சாலைகள் இயங்குகின்றன. இந்தத் தொழில்சாலைகளில் ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
 ஆவடியில் இருந்து 500 பொறியியல் தொழில்சாலைகள் புதுவைக்கு இடம் பெயர அனுமதி கேட்டுள்ளன. துபையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்ற கேரளம், தமிழ்நாட்டைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் புதுச்சேரியில் தங்களது வசதிக்கேற்ப 100, 50, 20 கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்குவதாக தெரிவித்துள்ளனர்.
 மத்திய அரசின் ஐஓசி நிறுவனம் காரைக்காலில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் கேட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில்சாலைகள் அதிகளவு வந்தால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT