புதுச்சேரி

ஏழை மாணவிகளுக்கு ரூ.1.74 லட்சம் கல்வி உதவித்தொகை

4th Jul 2019 09:03 AM

ADVERTISEMENT

ஏழை மாணவிகள் 12 பேருக்கு பாண்டிச்சேரி பன்முக ஒருங்கிணைந்த விழிப்புணர்வு இயக்கம் சார்பில், ரூ. ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 500 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
 பெற்றோரை இழந்த, பிரிந்த, கணவரால் கைவிடப்பட்ட நிலையில் வசதி வாய்ப்புகளின்றி இருக்கக்கூடியவர்களின் பிள்ளைகளின் கல்வி எவ்விதத்திலும் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்ற சமூக நோக்கில், அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பாண்டிச்சேரி பன்முக ஒருங்கிணைந்த விழிப்புணர்வு இயக்கம் செலுத்தி வருகிறது.
 அதன்படி, புதுவை நகர பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இமாகுலேட் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 2019 - 20ஆம் கல்வி ஆண்டில் பயின்று வரும் 12 மாணவிகளின் கல்விக் கட்டணத் தொகை ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபாயை பாண்டிச்சேரி பன்முக ஒருங்கிணைந்த விழிப்புணர்வு இயக்கம் செலுத்தி, அதற்கான ரசீதை பள்ளி முதல்வர் அருள் சகோதரி ஜோஸ்பின் செல்வராணி முன்னிலையில், அந்தந்த மாணவிகளிடம் புதன்கிழமை வழங்கியது.
 முன்னதாக, மாணவிகள் பள்ளியில் மரக்கன்றுகள் நட்டனர். அமைப்பின் தலைவர் வெள்ளையன், மணிமாறன், ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஜெனோ பில்டர்ஸ் நிறுவனர் தங்கமணிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
 இதுபோன்று உதவி தேவைப்படும் மாணவர்கள், நேரடியாக மாணவர்களுக்கு உதவ நினைப்பவர்கள் கே.வெள்ளையன், தலைவர், பாண்டிச்சேரி பன்முக ஒருங்கிணைந்த விழிப்புணர்வு இயக்கம், புதுவை - 9, செல்லிடப்பேசி எண் 8072762703 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
 
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT