புதுச்சேரி

பெண்ணிடம் நகை பறித்த மேற்கு வங்க இளைஞர் கைது

2nd Jul 2019 08:49 AM

ADVERTISEMENT

பெண்ணிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட மேற்கு வங்க இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து 9 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
 புதுச்சேரி குருசுக்குப்பம் பத்மினி நகர் புனித பிரான்சிஸ் ஆசிஸ் தெருவைச் சேர்ந்தவர் மோகன சுந்தரம். வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி விஜயகுமாரி (51). இவர், ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த வீட்டுக்குச் சென்றுவிட்டு, வ.உ.சி. நகரில் குடியிருந்து வரும் வாடகை வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாராம். அப்போது, அவரது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர், விஜயகுமாரி அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றாராம். அப்போது, விஜயகுமாரி சப்தமிடவே, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அந்த மர்ம நபரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
 முத்தியால்பேட்டை போலீஸார் மர்ம நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைதைச் சேர்ந்த ஜான்சன் (26) என்பதும், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும், அடிக்கடி விடுமுறை எடுத்து சென்னையிலும், புதுச்சேரியிலும் வழிப்பறி மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.
 இதையடுத்து, போலீஸார், ஜான்சனை கைது செய்ததுடன், அவர் வழிப்பறி செய்து வைத்திருந்த 9 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT