புதுச்சேரி

கிரண் பேடி தனது கருத்தை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்: புதுவை அதிமுக எச்சரிக்கை

2nd Jul 2019 09:00 AM

ADVERTISEMENT

தமிழக அரசு குறித்து விமர்சனம் செய்த புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தனது கருத்தைத் திரும்பப் பெறாவிடில், போராட்டம் நடத்தப்படும் என புதுவை அதிமுக எச்சரிக்கை விடுத்தது.
 இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்கள் குழு தலைவர் ஏ.அன்பழகன் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 தமிழக மக்களின் நலனுக்காக சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் அதிமுக அரசு குறித்தும், அதன் நிர்வாகம் குறித்தும் குறை கூற புதுவை மாநில துணைநிலை ஆளுநருக்கு தகுதி கிடையாது. வெள்ளம், வறட்சி ஏற்படும் போது, தண்ணீர் பிரச்னை ஏற்படுவது இயற்கை.
 அவ்வாறான காலங்களில் ஆளும் அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்யும். அந்த வகையில், தமிழக முதல்வரும், துணை முதல்வரும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
 புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, இந்த பிரச்னையில் தமிழக அரசைக் குறை கூறியுள்ளதை புதுவை மாநில அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது.
 துணைநிலை ஆளுநர் என்பவர் யார்? தனது அதிகாரம் என்ன? என்பதை உணராமல், பிற மாநில ஆட்சி குறித்து குறை கூறுவது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி குற்றமாகும். அவர் தனது கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
 இல்லாவிடில், புதுவையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
 ஆளுநர் கிரண் பேடியின் வரம்பு மீறிய செயல் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்படும் என்றார் அவர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT