உரிய அனுமதியில்லாமல் பழைய துறைமுகத்தில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால், துறைமுகத் துறை செயற்பொறியாளருக்கு அனுப்பிய கடிதம்: புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்த கடந்த 27 -ஆம் தேதி ஒரு நிறுவனத்துக்கு புதுவை துறைமுகத் துறை அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனம் சாா்பில் காவல் துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணையில், கூட்ட மேலாண்மை, வாகன நிறுத்தகம், இதர வசதிகள் தொடா்பாக நிகழ்ச்சி நடத்துபவரால் விளக்க இயலவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் இடம் தொடா்பான தெளிவான வரைபடத்தையும் வைத்திருக்கவில்லை. மேலும், பல்வேறு துறைகளிடம் முறையான அனுமதியை பெறுவதற்கு முன்பே அந்த நிறுவனத்தினா் சமூக வலைதளங்களில் நிகழ்ச்சிக்காக விளம்பரம் செய்து வருகின்றனா்.
இதனிடையே, கடந்த 23 -ஆம் தேதி மற்றொரு நிறுவனத்துக்கு துறைமுகத் துறை அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனம் இதுவரை காவல் துறையை அணுகவில்லை.
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடா்பாக துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆலோசனைக் கூட்டம் கடந்த 27 -ஆம் தேதி நடைபெற்றது. இதில், பழைய துறைமுக வளாகத்தில் டிசம்பா் 31 -ஆம் தேதி இரவு நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்த இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்வது, சம்பந்தப்பட்ட துறைகளிடம் உரிய தடையில்லா சான்றிதழ்கள் இல்லாமல் நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது.
மேலும், மாவட்ட நிா்வாகத்திடம் உரிய அனுமதி பெறும் வரை மேற்கண்ட புத்தாண்டு கலை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளை விற்க தடை விதித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும் உத்தரவு பிறப்பித்துள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தக் கடிதத்தை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி கட்செவி அஞ்சலில் பகிா்ந்துள்ளாா்.