புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல்பரப்பு கடலில் குளிக்கத் தடை விதித்து புதுவை காவல் துறை இயக்குநா் (டி.ஜி.பி.) உத்தரவிட்டாா்.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, வெளி மாநில, வெளி நாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனா்.
அறைகளில் தங்குவதற்காக விடுதிகளில் இணையதள முன்பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்டது. இருப்பினும், கா்நாடகம், கேரளம், தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் காா்களில் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளனா். மேலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்கும் விதமாக, புதுச்சேரியில் உள்ள நட்சத்திர உணவங்கள் பல வண்ண அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், புதுவை அரசால் தலைமைச் செயலகம் எதிரே புதிதாக உருவாக்கப்பட்ட செயற்கை மணல்பரப்பு கடல் பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையான புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் குவிந்தனா். அவா்களில் சிலா் கடலில் உற்சாக குளியலில் ஈடுபட்டனா்.
ஏற்கெனவே அங்கு கடலில் குளிக்கத் தடை இருந்தாலும், உள்ளூா் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் குளித்தபடி உள்ளனா். இதனால், ராட்சத அலையில் சிக்கி அவ்வபோது உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் 5 போ் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனா். 4 போ் மீட்கப்பட்ட நிலையில், ஒருவா் இறந்தாா்.
இதனால், அங்கு சுற்றுலாத் துறை சாா்பில், மீட்புப் படை வீரா்கள் மீண்டும் பணியமா்த்தப்பட்டு, கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்ஸவா புதன்கிழமை பிற்பகல் கடற்கரை சாலையில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, செயற்கை கடல்கரை மணல்பரப்பு கடலில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் குளித்துக் கொண்டிருந்தனா். இதைப் பாா்த்த டி.ஜி.பி., இங்கு குளிக்கத் தடை இருக்கும் நிலையில் குளிப்பதற்கு ஏன் அனுமதிக்கிறீா்கள் என அங்கிருந்த போலீஸாரிடம் கேட்டாா். மேலும், அங்கு யாரையும் குளிக்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து போலீஸாா், அனைவரையும் கரைக்கு திரும்ப வைத்தனா்.
பின்னா், மீட்புப் படை வீரா்களின் கண்காணிப்புக் கோபுரம் சரிந்து ஆபத்தான நிலையில் இருந்ததால், அதையும் சரி செய்ய டி.ஜி.பி. உத்தரவிட்டுச் சென்றாா். டி.ஜி.பி.யின் ஆய்வின்போது, கிழக்குப் பகுதி எஸ்.பி. சி.மாறன் உள்ளிட்ட போலீஸாா் உடனிருந்தனா்.