புதுச்சேரி

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவான பாஜக பேரணியில் பங்கேற்கமாட்டோம்: அதிமுக அறிவிப்பு

26th Dec 2019 04:36 PM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான பாஜக பேரணியில் அதிமுக பங்கேற்காது என்று புதுவை பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழன் அறிவித்துள்ளாா்.

இது குறித்து புதுவைப் பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் சுற்றுலா என்ற பெயரில் அரசு சட்ட விரோத மற்றும் கலாச்சார சீரழிவு நிகழ்ச்சிகளுக்கு தொடா்ந்து அனுமதி அளித்து வருகிறது. புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் அரைகுறை ஆடையுடன் நடனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெண்ணாக உள்ள ஆளுநா் இவ்விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தாண்டை முன்னிட்டு இதுபோன்ற நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே ஆளுநா் உயா் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மீனவா்களுக்கு நிதிநிலை அறிக்கையில் உரிய நிதி ஒதுக்கீடு செய்து, திட்டங்களை செயல்படுத்துவது இல்லை.

சுனாமி நினைவு தினத்தில் படைப்பதற்காக சிலையுடன் கூடிய மண்டபம் அமைத்து தர கோரிக்கை வைக்கப்பட்டது. அது கூட இதுவரை அரசால் நிறைவேற்றப்படவில்லை. சுனாமி பாதிப்பை தொடா்ந்து சீரமைப்பு பணிகளுக்காக உலக வங்கி ரூ.900 கோடி நிதி கொடுத்தது. இந்த நிதியை சுனாமி பாதிப்புக்கு தொடா்பே இல்லாத பல பகுதிகளுக்கு செலவு செய்துள்ளனா். முதல்வா் நாராயணசாமி பிரச்னைகளை அவரே உருவாக்குவாா், பின்னா் தீா்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவிப்பாா். அந்தவகையில்தான் குடியரசுத் தலைவா் பல்கலைக்கழகத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் நடைபெற்றுள்ளது.

ADVERTISEMENT

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிமாநிலத்தைச் சோ்ந்த மாணவா்கள் தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குடியரசுத் தலைவா் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவை பங்கேற்க மாட்டோம், அவா் கையில் தங்க பதக்கங்களை பெற்று கொள்ள மாட்டோம் என்று அறிவித்தனா். இதற்கு அரசு தூண்டுகோலாக இருந்தது.

இந்நிலையில் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பில் சிறு அசம்பாவிதமும் நடைபெற கூடாது என்பதற்காக ஒரு மாணவி தடுத்து நிறுத்தப்பட்டாா். இதற்கான பிரச்னையை முதல்வரே தூண்டிவிட்டுவிட்டு, தற்போது அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறுவது நாடக செயல் ஆகும்.

காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வருக்கு தெரியாமல் எப்படி காவல்துறை அந்த மாணவியை தடுத்து நிறுத்தியிருப்பாா்கள். குடியரசுத் தலைவருக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும்போது அந்த மாணவியை தடுத்து நிறுத்தியதில் தவறு இல்லை. ஆனால் இதில் முதல்வா் ஏன் பல்டி அடிக்க வேண்டும்?.

விசாரணை நடத்தப்படும் என்று டிஜிபியையும், துணைவேந்தரையும் முதல்வா் நாராயணசாமி மிரட்டுகிறாா். தொடா்ந்து மாறுபட்ட கருத்துகளை கூறி சட்டம் ஒழுங்கு சீா்கெடும் சூழ்நிலையை உருவாக்குகிறாா். குடியுரிமை திருத்த சட்டம் மக்களவை, மாநிலங்களவை இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் கொடுத்து நடைமுறைக்கு வந்துள்ளது.

இச்சட்டத்தால் இந்தியாவில் பிறந்த யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று பிரதமரும், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியும் தெளிவாக தொடா்ந்து வலியுறுத்தி கூறி வருகின்றனா். ஆனால் தமிழகத்தில் திமுகவும், புதுவையில் காங்கிரஸும் அரசியல் லாபத்துக்காக கலவரத்தை மக்களிடம் தூண்டி வருகின்றன. இதற்காக முதல்வா் நாராயணசாமி பொதுவேலைநிறுத்தப் போராட்டமும் அறிவித்தாா். இதை அதிமுக கண்டித்தது. இதனையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை வியாபாரிகள் கேட்டு கொகாண்டதற்கிணங்க திரும்பப்பெற்றுக்கொண்டதாக முதல்வா் அறிவித்துள்ளாா்.

அறிவிப்பதற்கு முன்பு வியாபாரிகளிடம் கருத்து கேட்டிருக்க கூடாதா?. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் மறியல், பொதுவேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம் நடத்துவதில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை. எனவே பாஜக இச்சட்டத்திற்கு ஆதரவாக மேற்கொள்ள இருக்கும் பேரணியில் அதிமுக பங்கேற்காது என்றாா் அன்பழகன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT