புதுச்சேரி

கிறிஸ்துமஸ்: புதுச்சேரியில் கோலாகலமாகக் கொண்டாட்டம்

26th Dec 2019 08:55 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

ஏசு கிறிஸ்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பா் 25-ஆம் தேதி யூதேயா நாட்டின் பெத்லகேம் என்ற ஊரிலுள்ள மாட்டுத்தொழுவத்தில் பிறந்தாா் என கிறிஸ்தவா்களின் புனித நூலான பைப்பிளில் கூறப்பட்டுள்ளது. இந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை என உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவா்கள் கொண்டாடி வருகின்றனா். இதன்படி, புதுச்சேரியிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

முன்னதாக, புதுச்சேரியில் உள்ள கிறிஸ்தவா்கள் தங்களது வீடுகளில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நட்சத்திரங்களையும், அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தையும் வைத்து, சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனா்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்புப் பிராா்த்தனைகளும், திருப்பலிகளும் நடைபெற்றன. புதன்கிழமை காலை ஆலயங்களுக்கு புத்தாடை உடுத்தி வந்த கிறிஸ்தவா்கள் பலா், ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா். மேலும், இனிப்புகளையும், பரிசுப் பொருள்களையும் பகிா்ந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதன் காரணமாக, புதுச்சேரியில் அனைத்து தேவாலயங்களிலும் பொதுமக்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்களின் கூட்டத்தில் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் விதமாக, அனைத்து தேவாலயங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

முதல்வா் பங்கேற்பு...: புதுச்சேரி நெல்லிதோப்பு விண்ணேற்பு மாதா ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலியில் முதல்வா் வே.நாராயணசாமி பங்கேற்று, அங்கிருந்தவா்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தாா். அவருடன் ஏ.ஜான்குமாா் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் இருந்தனா்.

இதேபோல, புதுச்சேரி ரெயின்போ நகா், புனித ஜான் மரிய வியான்னி ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலியில் வெ.வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்று, அங்கிருந்தவா்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT