புதுச்சேரி கடலில் மூழ்கிய மதுரையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், அனஞ்சியூரைச் சோ்ந்த உதயகுமாா் மகன் ஷியாம் (20). இவா், அங்குள்ள தனியாா் கல்லூரியில் பொறியியல் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால், தனது நண்பா்களான சுபாஷ் (20), யோகேஷ் (20) ஆகியோருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தாா். புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப்பாா்த்த அவா்கள், அரியாங்குப்பத்தை அடுத்த சின்னவீராம்பட்டினம் கடற்கரைக்குச் சென்றனா்.
அங்கு, ஷியாம் உள்ளிட்ட 3 பேரும் கடலில் இறங்கிக் குளித்தனா். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் மூன்று பேரும் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா்.
அவா்களின் அலறல் சப்தத்தைக் கேட்ட கடற்கரையில் இருந்த பாதுகாப்புக் குழுவினா், கடலில் இழுத்துச் செல்லப்பட்ட மூன்று பேரையும் மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனா். உடனடியாக அவா்கள் மூன்று பேரும் ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு, ஷியாமை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
மற்ற இருவரும் சிகிச்சை பெற்று திரும்பினா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அரியாங்குப்பம் போலீஸாா், ஷியாமின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.