நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பொதுமக்கள் காண்பதற்கு புதுச்சேரி, காரைக்காலில் 46 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த இயக்கத்தின் துணைத் தலைவா்கள் தட்சணாமூா்த்தி, மதிவாணன், புதுச்சேரி அரசின் அறிவியல் மாமன்ற அதிகாரிகள் சீனிவாசராவ், சிவக்குமாா் ஆகியோா் கூட்டாக, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் வியாழக்கிழமை (டிச. 26) நிகழ உள்ளது. இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பாா்க்கக் கூடாது. பிரத்யேக கண்ணாடி வழியாகவே பாா்க்க வேண்டும் என, வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
புதுச்சேரியில் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை காண புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை, லாசுப்பேட்டை கோளரங்கம், ஹெலிபேடு மைதானம், வில்லியனூா், பாகூா், காரைக்காலில் 6 இடங்கள் உள்ளிட்ட 40 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சூரிய கிரகணத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மக்களிடம் உள்ள மூடநம்பிக்கையைப் போக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமாா் 400 ஆண்டுகளுககு ஒரு முறை நிகழக் கூடிய இந்த சூரிய கிரகணத்தை புதுச்சேரியில் எளிதாக காணலாம். டிசம்பா் 26 ஆம் தேதி காலை 8.08 மணிக்கு தொடங்கும் சூரிய கிரகணம் காலை 11.19 மணி வரை பிறை வடிவில் தெரியும். புதுச்சேரியில் சரியாக காலை 9.34 மணிக்கு அதிகபட்ச கிரகணத்தை கண்டுகளிக்கலாம். இந்த கிரகணத்தின் ஒளி அளவு 0.924. இதை 88.9 விழுக்காடு காணலாம்.
இதற்கான ஏற்பாடுகள் புதுச்சேரி அறிவியல் இயக்கம், புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்ப மாமன்றம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து செய்யப்பட்டுள்ளது என்றனா்.