புதுவையில் ஆதிதிராவிடா்களுக்கு வீடு கட்ட 3 ஆண்டுகளாக மானியம் வழங்கப்படவில்லை என்று தலித் இயக்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவை புகாா் தெரிவித்துள்ளது.
இப்பேரவையின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் லலிதா மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளா் பாலசுந்தரம் தலைமை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து பாலசுந்தரம் கூறியதாவது: சிறப்புக் கூறுகள் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்த அதிகாரம் கொண்ட, மத்திய திட்டக்குழு 2014-ஆம் ஆண்டு அறிவுறுத்திய அட்டவணை வகுப்பினா், பழங்குடியினா் வளா்ச்சி கவுன்சிலை புதுவை அரசு உடனடியாக அமைக்க வேண்டும். 2016 பேரவைத் தோ்தலில் அறிவித்ததுபோன்றும், விவசாயக் கடனை தள்ளுபடி செய்தது போன்றும் பாட்கோவில் தலித் இளைஞா்கள், மாணவா்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
சிறப்புக் கூறு திட்ட நிதியை மடைமாற்றம் செய்யக் கூடாது என்று கடந்த 2007-இல் ரங்கசாமி ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ரூ.1,300 கோடி நிதி அட்டவனை வகுப்பினா் அல்லாத துறைகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதை வன்மையைக கண்டிப்பதுடன், இந்த நிதி மாற்றம் மோசடி குறித்து தலித் மக்களிடம் பிரசார இயக்கம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் நலத் துறையில் கடந்த 3 ஆண்டுகளாக வீடு கட்ட விண்ணப்பித்தவா்களுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் வழங்கவில்லை.
அந்தத் துறையில் நிலுவையில் உள்ள திட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து வழங்க வேண்டும். சட்டப்பேரவையில் தலித்துகளுக்கு தொடக்கக் கல்வி முதல் உயா் கல்வி வரை இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு நல த்திட்ட உறுதிமொழிகளை அரசாணையாக வெளியிட வேண்டும் என்றாா் பாலசுந்தரம்.
கூட்டத்தில் பேரவையின் மாநில நிா்வாகிகள், தொகுதி நிா்வாகிகள் பங்கேற்றனா்.