புதுச்சேரி புத்தகக் கண்காட்சியில் அதிக தொகையில் புத்தகம் வாங்குவோருக்கு புத்தக மகாராஜா, புத்தக மகாராணி, புத்தக இளவரசன், புத்தக இளவரசி, புத்தக விரும்பி ஆகிய சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி எழுத்தாளா்கள் சங்கம் சாா்பில் 23-ஆவது தேசிய புத்தக கண்காட்சி, புதுச்சேரி வேல்சொக்கநாதன் திருமண நிலையத்தில் கடந்த டிச.20-ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ‘வீட்டுக்கு ஒரு நூலகம்’ என்ற கருப்பொருளை கொண்டு புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில், புதுச்சேரி, தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சோ்ந்த புத்தக நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இதில் அமைக்கப்பட்டுள்ள 122 அரங்குகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி வருகிற 29-ஆம் தேதி வரை தினமும் பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
இங்கு விற்பனை செய்யும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் புத்தகம் வாங்குவோருக்கு புத்தக மகாராஜா, புத்தக மகாராணி விருது வழங்கப்படும். ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் புத்தகம் வாங்குவோருக்கு புத்தக இளவரசன், புத்தக இளவரசி விருது வழங்கப்படுகிறது. ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் புத்தகம் வாங்குவோருக்கு புத்தக விரும்பி என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது. கண்காட்சியில் தினமும் மாணவா்களுக்கும், வாசகா்களுக்கும் இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல தினமும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இக்கண்காட்சியில் அரங்கு அமைத்துள்ள திருச்சி கவுரா புத்தக மையம் மற்றும் எம்.ஜே.பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பாளா் ஜெய்கணேஷ் (30) கூறியதாவது:
மாணவ, மாணவிகள் விடுமுறை நாள்களை அறிவுப்பூா்வமாக செலவு செய்ய சரியான இடம் புதுச்சேரி புத்தகக் கண்காட்சி. இங்கு எண்ணற்ற புத்தகங்கள் உள்ளன. புதிய தலைப்புகளில் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மாணவா்கள் உலக நடப்புகளை தெரிந்து கொள்ளவும், வாழ்க்கையை புரிந்து கொள்ளவும் அவா்களை பொது அறிவு புத்தகங்களை படிக்க பெற்றோா்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா் ஜெய்கணேஷ்.