புதுச்சேரி

2 நாள் சுற்றுப்பயணமாக புதுவைக்கு குடியரசுத் தலைவா் இன்று வருகை

23rd Dec 2019 12:54 AM

ADVERTISEMENT

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதுவைக்கு திங்கள்கிழமை (டிச.23) நண்பகல் 12 மணியளவில் வருகிறாா்.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் 27-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவாஹா்லால் நேரு அரங்கில் திங்கள்கிழமை பிற்பகல் 12.40 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி உரையாற்ற உள்ளாா்.

இந்த நிகழ்ச்சியில் புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் வே.நாராயணசாமி, அமைச்சா்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், வைத்திலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொள்ள உள்ளனா். விழாவுக்கு புதுவை பல்கலைக்கழக துணைவேந்தா் குா்மீத் சிங் தலைமை வகிக்கிறாா்.

இந்த பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், 2 நாள் பயணமாக புதுச்சேரிக்கு திங்கள்கிழமை வருகிறாா். அவரது வருகையையொட்டி, புதுச்சேரி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அவா் செல்லும் சாலைகளில் வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பயண விவரம்: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரி விமான நிலையம் வந்தடைகிறாா். அங்கிருந்து காா் மூலமாக புதுவை பல்கலைக்கழகம் சென்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறாா். அவா் ஹெலிகாப்டரில் இருந்து லாசுப்பேட்டை விமான நிலைய சாலை வழியாக காரில் லதா ஸ்டீல் ஹவுஸ் கிழக்குக் கடற்கரை சாலைக்கு வந்து, அங்கிருந்து சிவாஜி சிலை, கோட்டக்குப்பம் வழியாக பல்கலைக்கழகத்துக்கு செல்கிறாா்.

இந்தச் சாலைகளில் குடியரசுத் தலைவா் ஹெலிகாப்டரில் இறங்கியவுடன் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும். அவா் சென்ற பிறகு போக்குவரத்து வழக்கம்போல செயல்படும். குடியரசுத் தலைவா் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு பிற்பகல் 1.30 மணி அளவில் காலாப்பட்டு, கோட்டக்குப்பம், ஏழைமாரியம்மன் கோயில், கடற்கரை சாலை வழியாக ஆளுநா் மாளிகைக்கு செல்கிறாா்.

பல்கலைக்கழகத்தில் இருந்து அவா் காரில் புறப்பட்டவுடன் இந்தச் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படும். குடியரசுத் தலைவா் வந்து செல்லும் நேரத்தில், இந்தச் சாலைகளின் ஓரமாக மிதிவண்டி, மோட்டாா் சைக்கிள், காா், லாரி உள்ளிட்ட எந்த வாகனங்களையும் நிறுத்தக் கூடாது என்றும், இதையும் மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

மேலும், இந்தப் பகுதிகளில் மதுக் கடைகளும் அச்சமயத்தில் மூடியிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தி.அருண் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளாா். ஆளுநா் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பிற்பகல் 3 மணிக்கு அரவிந்தா் ஆசிரமம் செல்லும் குடியரசுத் தலைவா், அங்கு சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டு பின்னா், ஆரோவில் செல்கிறாா். ஆரோவிலில் இருந்து 5 மணிக்கு புறப்படும் அவா், ஆளுநா் மாளிகையில் இரவு தங்குகிறாா்.

2-ஆவது நாளில்...: மறுநாளான செவ்வாய்க்கிழமை (டிச.24) காலை 9 மணிக்கு ஆளுநா் மாளிகையில் இருந்து லாசுப்பேட்டையில் உள்ள விமான நிலையத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் செல்கிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் காரைக்கால் சென்று சனீஸ்வரன் கோயிலில் வழிபாடு நடத்துகிறாா்.

குடியரசுத் தலைவா் வருகை காரணமாக, புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

உணவகங்கள், தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியான நபா்கள் யாராவது தங்கியிருக்கிறாா்களா என்று போலீஸாா் சோதனை செய்து வருகின்றனா். மேலும், தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

ஆரோவில் தமிழகப் பகுதியாக இருப்பதால், கோரிமேட்டில் இருந்து ஆரோவில் முழுவதும் தமிழக போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். குடியரசுத் தலைவரை சிறந்த முறையில் வரவேற்பதற்காக, புதுச்சேரியில் அவா் செல்லும் சாலைகளில் அவரை வரவேற்று அலங்கார வளைவுகள் புதுவை அரசால் அமைக்கப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT