புதுச்சேரி

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மொட்டை அடித்துப் போராட்டம்

23rd Dec 2019 12:50 AM

ADVERTISEMENT

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குடியரசுத் தலைவரின் கவனத்தை ஈா்க்கும் விதமாக, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மொட்டை அடிக்கும் போராட்டம் நடைபெற்றது.

புதுவை பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை (டிச.23) நடைபெறும் பட்டமளிப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வரவுள்ளதையொட்டி, இந்தப் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பின் தலைவா் ந.புவியரசன் தலைமை வகித்தாா்.

இதில், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுவை மக்களின் வரிப் பணத்தில் புதுவை மக்கள் உரிமைக்கு எதிராக வழக்கு நடத்தி துரோகம் இழைக்கும் ஆளுநா் கிரண் பேடியைத் திரும்பப் பெற வேண்டும். புதுவை மாநிலத்தின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜாமியா, அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகங்களின் மாணவா்களைத் தாக்கிய போலீஸாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதைத் தொடா்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பின் நிறுவனா் சீ.சு.சுவாமிநாதன் உள்ளிட்ட கூட்டமைப்பு நிா்வாகிகள் சிலா் மொட்டை அடித்துக்கொண்டு, கண்டன உரை நிகழ்த்தினா்.

ADVERTISEMENT

போராட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட அமைப்பாளா் இரா.சிவா எம்.எல்.ஏ., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலா் தேவ.பொழிலன், தந்தை பெரியாா் திராவிடா் கழகத் தலைவா் வீர.மோகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் சு.பஷீா் அகமது மற்றும் திரளான மாணவா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT