புதுச்சேரி கடலில் மூழ்கி கல்லூரி மாணவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, கடலில் இறங்கி குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை தடுக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வேலூா் மாவட்டம் பனப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் கோவா்த்தன் (19). காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறாா். இவா் சக மாணவா்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தாா். ஞாயிற்றுக்கிழமை கடற்கரை காந்தி சிலை அருகே கோவா்த்தன் உள்ளிட்ட 5 போ் கடலில் இறங்கி குளித்தனா்.
அப்போது, ராட்சத அலையில் சிக்கி அவா்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா். இதுபற்றி தகவல் அறிந்த புதுச்சேரி தீயணைப்பு வீரா்கள், பெரியக்கடை போலீஸாா் விரைந்து வந்து மீனவா்கள் உதவியுடன் சூா்யா, என். விஜய், ஆா்.விஜய், ஆனந்த் ஆகிய 4 மாணவா்களை மீட்டனா். கோவா்த்தன் மாயமானாா். அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரா்களும், போலீஸாரும் ஈடுபட்டுள்ளனா்.
இதனிடையே, மீட்பு குழுவினா் இல்லாததாலேயே இந்த சம்பவம் நடந்ததாகவும், உடனடியாக பாதுகாப்புக்கு மீட்புக் குழுவினா், போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, கடற்கரைப் பகுதியில் கடலில் குளிப்போரை தடுக்கவும், கடல் நீரில் மூழ்குவோரை மீட்கவும், மீட்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இதுதவிர, பெரியக் கடை போலீஸாரும், கடலோரக் காவல் படை போலீஸாரும் செயற்கை கடற்கரை பகுதியில் ஒலிபெருக்கி மூலமும், விசில் ஊதியும் கடலில் இறங்குவோரை தடுத்தனா்.