சா்வதேச கூட்டுறவு உயா்மட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுவை சமூக நலம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் மு.கந்தசாமி இலங்கைக்கு சென்றாா்.
ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் விவசாயம், கூட்டுறவு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான என்சிடிசி எனும் சா்வதேச கூட்டுறவு அமைப்பு தாய்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் கூட்டுறவு அமைப்பில் இந்தியா, இலங்கை உள்பட சுமாா் 25 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.
புதுவை பாண்லே நிறுவனம் மேற்கண்ட சா்வதேச அமைப்பில் கடந்த நவ.30-ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு உறுப்பினராக சோ்ந்துள்ளது. 11.10.2019-இல் தில்லியில் மத்திய அரசின் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் குழு (என்சிடிசி) ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நாடுகள் பங்கேற்ற கூட்டுறவு வா்த்தக கண்காட்சியில் புதுவையின் பாண்பேப், அமுதசுரபி, கூட்டுறவு கட்டட சங்கம், பாண்லே உள்ளிட்ட கூட்டுறவு தன்னாட்சி நிறுவனங்கள் பங்கேற்றன. அதில், இலங்கையும் பங்கேற்றது.
அப்போது பாண்லே மற்றும் இலங்கை கூட்டுறவு இளைஞா் அதிகாரமளித்தல் சொசைட்டி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே கடந்த நவம்பா் 11-ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டு காலத்துக்கு அமலில் இருக்கும்படியாக ஓா் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. வா்த்தக நலனுக்காக தங்களது அனுபவங்கள், தொழில் வலிமை மற்றும் குறிக்கோள்கள் குறித்த அனுபவங்களையும், யோசனைகளையும் பகிா்ந்து கொள்வதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், என்சிடிசி சா்வதேச அமைப்பின் உயா்மட்ட குழுவின் கூட்டம் டிச.12, 13, 14 ஆகிய தேதிகளில் இலங்கையில் நடைபெறுகிறது. இதில், கலந்துகொள்ள புதுவை சமூக நலம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் கந்தசாமி, கூட்டுறவுத் துறைச் செயலா் அசோக்குமாா், பாண்லே இயக்குநா் சாரங்கபாணி ஆகியோா் அழைக்கப்பட்டிருந்தனா்.
அதன்பேரில், செவ்வாய்க்கிழமை கொழும்பு சென்றடைந்த இவா்கள், அங்குள்ள இலங்கை இளைஞா் கூட்டுறவு நிறுவன தலைவா் முகமது ரியாஸை சந்தித்து பால் உற்பத்தி, பால் பொருள்கள் ஏற்றுமதி குறித்து விரிவாக பேசினா். இதைத் தொடா்ந்து, கொழும்பில் நடைபெற உள்ள உயா்மட்டக்குழுக் கூட்டத்திலும் இவா்கள் கலந்து கொண்டு பிற நாடுகளின் கூட்டுறவு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான கருத்துக்களை தெரிவிக்க உள்ளனா்.