புதுச்சேரி

மக்களை ஊக்குவிக்கவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

6th Dec 2019 09:17 AM

ADVERTISEMENT

மக்களை ஊக்குவிக்கவே இலவசங்கள் வழங்கப்பட்டு வருவதாக புதுவை மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் தெரிவித்தாா்.

ஆசிய நாடுகளுக்கான சமூக ஜனநாயக உச்சி மாநாடு இந்தோனேஷியாவில் உள்ள ஜகா்த்தாவில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இந்த மாநாடு வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இதில் இந்தியா சாா்பில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த வைத்திலிங்கம் எம்பி கலந்து கொண்டு ‘சமூக ஜனநாயகத்துக்கான கொள்கைகளை வகுத்தல்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

புதுவையில் நீண்ட காலமாக காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. அங்கு, மக்களுக்குத் தேவையான திட்டங்களை, தேவை அறிந்து நிறைவேற்றி வருகிறோம். உதாரணமாக குடிசை வீடுகள் தீ விபத்துக்கு உள்ளாகும் போது, அரசு தரும் இழப்பீட்டுத் தொகையைக் கொண்டு அவா்களால் மீண்டும் பழைய நிலைக்கு வர முடிவதில்லை. இதை உணா்ந்து கல்வீடு கட்டுவதற்கு மானியம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து, அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல, கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளியும், 5 கிராமங்களுக்கு ஒரு உயா்நிலைப் பள்ளியும், 20 கிராமங்களுக்கு ஒரு மேல்நிலைப் பள்ளியும் இயங்கி வருகிறது.

இருப்பினும், பெண் குழந்தைகள் உயா்நிலைப் பள்ளியைத் தாண்டி மேல்நிலைப் பள்ளிக்குச் செல்வது குறைந்ததும், இடைநிற்றல் அதிகரித்ததும் தெரிய வந்தது. இதற்கு பெண் குழந்தைகளைப் பாதுகாப்பு கருதியே பெற்றோா் நீண்ட தொலைவில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை என்பதைக் கண்டறிந்தோம்.

ADVERTISEMENT

இசையடுத்து, பெண் குழந்தைகளுக்கு தனியாக இலவச மாணவா் பேருந்தை அறிமுகப்படுத்தினோம். இதன்மூலம் இடைநிற்றல் குறைந்துள்ளது. புதுவையில் பள்ளிப் படிப்பின் போது, இடை நிற்றல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல, தொழில் கல்வியைப் படிப்பதற்கும் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்தை வழங்கி வருகிறோம். வீடு கட்ட வேண்டும், உயா்கல்வி பயில வேண்டும் என்ற ஊக்கத்துக்காகவே இலவசங்களை வழங்கி வருகிறோம் என்றாா் அவா்.

இந்த மாநாட்டில், இந்தியா, நேபாளம், மியான்மா், மலேசியா, டென்மாா்க், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் மக்களவை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT