புதுச்சேரி

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ. 373 கோடியை வழங்க அமைச்சா் கோரிக்கை

6th Dec 2019 09:17 AM

ADVERTISEMENT

புதுவைக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ. 373 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம், புதுவை மாநில வருவாய்த் துறை அமைச்சா் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான் வலியுறுத்தினாா்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில், பல்வேறு நோ்முக, மறைமுக வரிகளை ஒன்றிணைத்து மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியது. இந்த வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பைச் சமாளிக்க இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது.

அதன்படி 2 மாதங்களுக்கு ஒருமுறை இந்தத் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்தத் தொகை வழங்கப்படவில்லை. இதனால், மாநிலங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.

எனவே, இந்த பிரச்னைக்கு குறித்து மக்களவை, மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் குரல் எழுப்பின. இந்த நிலையில், இதுதொடா்பாக ஆலோசிக்க எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சோ்ந்த நிதி அமைச்சா்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்திக்க முடிவு செய்தனா்.

ADVERTISEMENT

அதன்படி தில்லி, பஞ்சாப், புதுவை, மத்தியப் பிரதேசம், கேரளம், ராஜஸ்தான், சத்தீஷ்கா், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் நிதி அமைச்சா்கள் மற்றும் பிரதிநிதிகள் தில்லி சென்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

புதுவை மாநில நிதி அமைச்சா் பொறுப்பை வகித்து வரும் முதல்வா் நாராயணசாமிக்கு மூட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அவருக்குப் பதிலாக அமைச்சா் ஷாஜகான் பங்கேற்றாா். இந்தக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சா்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் புதுவையில் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியதால் ஏற்பட்டு வரும் இழப்பீட்டை அடுத்து, அதற்காக வழங்கப்படும் நிதி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 4 மாதங்களாக வழங்கப்படவில்லை. சுமாா் ரூ. 373 கோடி வழங்கப்பட வேண்டும். இது புதுவை மாநில வருவாயில் 58 சதவீதம் ஆகும். இந்தப் பணத்தை வழங்காவிட்டால், புதுவையில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாது. எனவே, உடனடியாக ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

அப்போது அவரிடம், இழப்பீட்டுத் தொகை கூடிய விரைவில் வழங்கப்படும் என மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் உறுதியளித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT