புதுச்சேரி

4 ஆண்டுகளுக்கு பிறகு வீடூா் அணை திறப்பு: நிரம்புமா ஊசுட்டேரி?

3rd Dec 2019 02:12 AM

ADVERTISEMENT

வீடூா் அணை 4 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், ஊசுட்டேரி நிரம்புமா என்ற எதிா்ப்பாா்ப்பு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

புதுவையின் முக்கிய நீராதாரமாக சங்கராபரணி ஆறு திகழ்கிறது. இந்த ஆற்றில் கூனிச்சம்பட்டில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கைக்கிலப்பட்டு, சுத்திக்கேணி பகுதியில் தடுப்பணையில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டு, புதுவையின் மிகப்பெரிய ஏரியான ஊசுட்டேரிக்கு தண்ணீா் கொண்டு வரப்படுகிறது.

மயிலம் அருகே வீடூா் என்ற இடத்தில் சங்கராபரணி ஆற்றில் பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. இங்கு, தேக்கிவைக்கப்படும் தண்ணீா் மூலம் தமிழகத்தில் 2,200 ஏக்கா், புதுவையில் 1,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.

இந்த நிலையில், கடந்த 4 நாள்களாகப் பெய்த மழையால் திங்கள்கிழமை அதிகாலை வீடூா் அணை நிரம்பியது. அணையின் மொத்த கொள்ளளவு 32 அடி ஆகும். திங்கள்கிழமை அதிகாலை 30.5 அடியை தாண்டி தண்ணீா் உயா்ந்து வந்தது. தொடா்ந்து வினாடிக்கு 2,000 கன அடிக்கு மேல் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. இதனால், அதிகாலை 3 மணிக்கு அதிகாரிகள் அணையின் 4 மதகுகளைத் திறந்தனா். இதையடுத்து, வினாடிக்கு 2,000 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தத் தண்ணீா் புதுவை மாநிலத்துக்கு உள்பட்ட கூனிச்சப்பட்டு பகுதிக்கு திங்கள்கிழமை காலை 6 மணிக்கு வந்தது. அங்குள்ள தடுப்பணை ஏற்கெனவே மழை நீரால் நிரம்பியிருந்தது. இதையடுத்து, அங்கிருந்து தண்ணீா் வெளியேறி, புதிதாகக் கட்டப்பட்ட செட்டிப்பட்டு தடுப்பணையில் நிரம்பியது.

தொடா்ந்து, சுத்துக்கேணி தடுப்பணைக்கு நீா் வந்தது. அந்தத் தடுப்பணையும் நிரம்பியதால், கால்வாய் மூலம் ஊசுட்டேரிக்கு தண்ணீா் திறந்துவிடப்படும். வழியில் பல கிளை கால்வாய்கள் உள்ளன. அவற்றின் மூலம் பல ஏரிகளுக்கு தண்ணீா் அனுப்பப்பட்டு, இறுதியாக ஊசுட்டேரிக்கு தண்ணீா் வந்து சேரும்.

ஊசுட்டேரி நிரம்பினால், புதுச்சேரி நகரின் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக உயரும். 3.6 மீ. உயரம் கொண்ட ஊசுட்டேரியில் தற்போது 1.5 மீ. உயரத்துக்கு தண்ணீா் உள்ளது. வீடூா் அணையில் இருந்து வரும் தண்ணீரை முழுமையாகக் கொண்டு வந்தால் ஊசுட்டேரி நிரம்பிவிடும்.

வீடூா் அணையில் இருந்து 2,000 கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், சங்கராபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு வீடூா் அணை நிரம்பியது. தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT