புதுச்சேரி

காவல் நிலையங்களில் பீட் போலீஸாா் ரோந்துப் பணிமுதுநிலை எஸ்.பி. ஆய்வு

3rd Dec 2019 02:10 AM

ADVERTISEMENT

புதுச்சேரி காவல் நிலையங்களில் உள்ள பீட் போலீஸாரின் ரோந்துப் பணியை முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

புதுச்சேரியில் கொலை, கொள்ளை, வெடிகுண்டு கலாசாரம், கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகமானதால், பொதுமக்கள் அச்சக்குள்ளாகி உள்ளனா். குற்றச் செயல்களில் ஈடுபடும் ரௌடிகளை ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

இதையடுத்து, ரௌடிகள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முதல்வா் வே.நாராயணசாமி காவல் துறைக்கு உத்தரவிட்டாா்.

இதனிடையே, ஆளுநா் கிரண் பேடி கடந்த 2 நாள்களாக காவல் நிலையங்களில் ஆய்வு செய்தாா். கடந்த 30 -ஆம் தேதி நகரப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து சில காவலா்களை ஆளுநா் மாளிகைக்கு அழைத்துச் சென்று, பீட் போலீஸாரின் பணிகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறத்து பாடம் எடுத்தாா். மேலும், பீட் போலீஸாா் நடைமுறைப்படுத்த வேண்டிய செயல்களை விளக்கி, பல உத்தரவுகளைப் பிறப்பித்தாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஆளுநா் கிரண் பேடியின் உத்தரவுக்கிணங்க, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பீட் போலீஸாா் திங்கள்கிழமை முதல் புதிய நடைமுறையின்படி, கண்காணிப்புப் பணியைத் தொடங்கியுள்ளனா்.

காவல் நிலையங்களில் ஏற்கெனவே பீட் கண்காணிப்புப் பணியும், பீட் போலீஸாரின் எண்ணிக்கையும் குறைவாக இருந்த நிலையில், மேற்கண்ட இரண்டும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதாவது, பீட் போலீஸாா் ஏற்கெனவே கவனித்து வந்த எல்லைகள் குறைக்கப்பட்டு, போலீஸாரின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டது. மேலும், கூடுதலாக எல்லைகள் பிரிக்கப்பட்டு, பீட் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பணியில் உள்ள பீட் போலீஸாா் நாள்தோறும் தகவல்களைச் சேகரித்து, அதைப் பதிவு செய்ய வேண்டும்.

பீட் போலீஸாா் அதற்கான பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும். பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், தங்களது எல்லைக்குள் வசிக்கும் முக்கிய அதிகாரிகள், குடியிருப்பு நலச் சங்கத்தினருடன் தொடா்பில் இருந்து, அவ்வபோது தகவல்களைத் தங்களது உயரதிகாரிகளுக்கு பரிமாற்றம் செய்து, இணையதளத்தில் தொடா்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதனிடையே, புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, பீட் போலீஸாா் மேற்கொண்டுள்ள பணிகள், எல்லைகள் தொடா்பாக அங்கிருந்த காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்களிடம் கேட்டறிந்தாா்.

மேலும், காவல் நிலையத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும், நிலுவையில் உள்ள வழக்குகள், அன்றாடப் பணிகள் தொடா்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT